Saturday, 26 July 2008

கண் சத்திர சிகிச்சையின் போது 6 அங்குல நீளமான புழு மீட்பு

தலைவலியை சகிக்கமாட்டாத இளம் பெண்ணொருவர் மகியங்கனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒன்றரை மாதத்தின் பின்னர், மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது, அப் பெண்ணின் கண்ணிலிருந்து ஆறு அங்குல நீளமுள்ள புழுவொன்றை டாக்டர்கள் மீட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதியன்று மகியங்கனை அரசினர் மருத்துவமனை இப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போதே அவரது கண் பகுதியிலிருந்து இப்புழு மீட்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாகவே, இப் பெண் தலைவலியினால் மிகுந்த அவஸ்தைப்பட்டு வந்ததுடன், மகியங்கனை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒன்றரை மாத காலமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இப்பெண்ணுக்கு பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எந்தவொரு சிகிச்சையிலும் பயன்கிடைக்காத நிலையில் இப் பெண் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். இவ்வேளையிலேயே, அப் பெண்ணின் வலது கண்ணிலிருந்து ஆறு அங்குல நீளமான புழு உயிருடன் வெளியே எடுக்கப்பட்டது.

இப்புழு, பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்திய நிபுணர் டாக்டர் பி.கே.என்.துனுசிங்கவிடம் தொடர்பு கொண்டு வினவியபோது, இன்னும் ஐந்து தினங்களுக்கு மேல், இப்புழு கண்ணிலேயே இருக்குமானால் இப்பெண்ணின் கண் பார்வை முற்றாக பாதிக்கப்பட்டிருக்கும். அத்துடன், இப்புழு மூளையை நோக்கி சென்றிருந்தாலும், பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு.

மேலும், வளர்ப்பு நாய், மற்றும் பூனையை மடியில் வைத்து கொஞ்சும் சந்தர்ப்பங்களில் இப்புழு கண்ணுக்குள் செல்ல வாய்ப்புண்டு. இது சம்மந்தமாக இப்புழுவை, இனம்காணும் வகையில் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது? என்று கூறினார்.

சத்திரசிகிச்சைக்குட்பட்ட பெண், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

No comments: