Friday, 25 July 2008

பெங்களூரில் 7 இடங்களில் குண்டுவெடிப்பு-3 பேர் பலி?

 பெங்களூரில் 7 இடங்களில் அடுத்தடுத்து இன்று குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா செக்போஸ்ட், மைசூர் ரோட்டில் உள்ள நாயந்தஹள்ளி, கோரமங்களா, ஆடுகோடி, கண்டோன்மென்ட் அருகே உள்ள லாங்போர்ட் டவுன், சாந்தி நகர் அருகே ரிச்மண்ட் டவுன், எம்.ஜி.ரோடு அருகே உள்ள விட்டல் மல்லையா ரோடு ஆகிய இடங்களில் இந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

முதல் குண்டு 1.20 மணிக்கு மடிவாளா செக்போஸ்ட் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் வெடித்தது. இதில் ஸ்ரீ ரவி என்ற பெண் பலியானார். அவருடன் நின்றிருந்த கணவர் ரவியும் இன்னொருவரும் காயமடைந்தனர்.

இதையடுத்து 1.25 மணிக்கு ஆடுகோடியின் சாக்கடைப் பகுதி அருகே இரண்டாவது குண்டு வெடித்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

1.45 மணிக்கு மைசூர் ரோட்டில் நாயந்தஹள்ளியில் மூன்றாவது குண்டு வெடித்தது.

நான்காவது குண்டு 2.10 மணிக்கு கோரமங்களாவில் வெடித்தது, ஐந்தாவது குண்டு 2.25 மணிக்கு விட்டல் மல்லையா சாலையிலும், 6வது குண்டு 2.35 மணிக்கு லாங்போர்ட் டவுனிலும் குண்டு வெடித்தது.

7வது குண்டு ரிச்மண்ட் டவுனிலும் வெடித்தது. சுமார் 1 மணி நேர இடைவெளியில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன.

இதில் 3 பேர் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது. பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், ஒரு பெண் பலியானது மட்டுமே இதுவரை உறுதியாகியுள்ளது.

வெடித்தவை அனைத்துமே குறைந்த சக்தி கொண்ட குண்டுகளே என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைமர்களைக் கொண்டு இவை வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன. 4 இடங்களில் வெடித்த குண்டுகளில் யாருமே காயமடையவில்லை எனவும் போலீசர் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடித்த இடங்கள் அனைத்துமே ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகள் ஆகும்.

இந்த சம்பவத்தையடுத்து பெங்களூரின அனைத்து வர்த்தக மால்களும் மூடப்பட்டுவி்ட்டன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுவிட்டன. அதே போல திரையரங்குகளும் மூடப்பட்டுவிட்டன.

No comments: