Friday, 18 July 2008

இரண்டு வாரங்களுக்குள் 8 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்- சுதந்திர ஊடக இயக்கம்

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்துக் கண்காணிப்பதற்கு அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட எட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

இவற்றுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபோதும் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக அந்த அமைப்புக் கூறியுள்ளது.

இவற்றில் ஊடகவியலாளர்கள் வாய்மொழி மூலமான கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளானமை, பொது இடங்களில் தாக்கப்பட்டமை, பொலிஸார் எனக் கூறிக்கொண்டு ஊடகவியலாளர்களின் வீடுகளுக்குச் சென்று தாக்கப்பட்டமை குறித்த சம்பவங்கள் அடங்குவதாக சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.

“ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகள் குறித்துக் கண்காணிப்பதற்கு அமைச்சரவை உபகுழுவொன்று அமைக்கப்பட்டிருப்பது வெறும் கண்துடைப்புக்கே. ஊடக சுதந்திரத்துக்கும், சுதந்திரமான வெளிப்பாட்டுக்கும் இலங்கையில் சக்தி இல்லை” என சுதந்திர ஊடக அமைப்பு அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து அமைச்சரவை உபகுழு விசாரணைகளை நடத்தவேண்டுமெனவும், ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் மதிப்பளிக்கவேண்டுமனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: