மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் உள்ள ஈ.பி.டி.பி. அலுவலக வளாகத்தினுள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கருதப்படும் தமிழ் வர்த்தகர் கொலை தொடர்பில் ஈ.பி.டி.பியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர் ஒருவர் உட்பட ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் ஒன்பது பேர் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளை வானில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்ட தேவதாஸ் சுரேஷ்குமார் என்ற வர்த்தகர் காணாமல் போனமை தொடர்பாக அவரது தந்தை ஏறாவூர் காவல்துறை அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
பின்னர், கடத்திச்செல்லப்பட்ட நபரின் உடலம், தலை வெளியே தெரியும்படி புதைக்கப்பட்டநிலையில் செங்கலடியில் உள்ள ஈ.பி.டி.பி. அலுவலக வளாகத்திலிருந்து காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை செய்த ஏறாவூர் காவல்துறையினர், குறிப்பிட்ட வர்த்தகரை கடத்துவதற்கு பயன்படுத்ப்பட்டதாக கருதப்படும் வெள்ளை வான் ஒன்றையும் உந்துருளி ஒன்றையும் ஈ.பி.டி.பியின் செங்கலடி அலுவலகத்திலிருந்து மீட்டுள்ளனர்.
அத்துடன், அந்த அலுவலகத்தைச் சேர்ந்த ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் ஒன்பது பேரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், கிழக்கு மகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுன்கிறது.
இதேவேளை, குறிப்பிட்ட கடத்தல் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் இன்னொரு உந்துருளியையும் சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் மூவரையும் தேடி தாம் வலை விரித்துள்ளதாக ஏறாவூர் காவல்துறை பிரதி பொறுப்பதிகாரி நாலக்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment