கறுப்பு ஜூலையை நினைவுகூரும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களால் வெளிநாடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த நாடுகள் அனுமதி வழங்கக் கூடாதென, இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து 83ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தென்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டு இந்த வருடத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கே அனுமதியளிக்கவேண்டாமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏதாவது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதில் பெருமளவு மக்கள் ஒன்று கூடினால் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு நிதியுதவி கிடைத்துவிடுமென வெளிவிவகார அமைச்சு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.
அத்துடன், புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துமாறு கொழும்பிலுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது.
இந்த மாதம் 27ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவிருக்கும் சார்க் உச்சிமாநாட்டை முன்னிட்டு கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு அனுப்பியுள்ள ஒன்பது பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பத்து நாடுகளில் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்சிகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் அதிருப்தி வெளியிடப்பட்டிருப்பதுடன், பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதித்தமைக்கு எதிராக அந்தந்த நாட்டு வெளிவிவகார அமைச்சுக்களுக்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அனுப்பியுள்ள கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment