Tuesday, 8 July 2008

நீர்மூழ்கி மனித வெடிகுண்டுகளைப் பாவிக்க விடுதலைப்புலிகளின் புது தற்கொலைப்படை

விடுதலைப்புலிகளிடம், நீர்மூழ்கி மனித வெடிகுண்டு படை இருப்பது குறித்து, இந்தியாவுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை தகவல் அனுப்பி உள்ளது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உக்கிரமான சண்டை நடந்து வருகிறது. நடுக்கடலில், கப்பல்களை தகர்க்கும் வெடிகுண்டுகள் விடுதலைப் புலிகளிடம் உள்ளது.

இதே போல, நீர்மூழ்கி மனித வெடிகுண்டு தற்கொலைப் படையும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இந்தியாவை, இலங்கை அரசு உஷார் படுத்தி உள்ளது.இலங்கையில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்ள உள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல், அதை முறியடிப்பது குறித்து ஆலோசிக்க இலங்கை சென்ற, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையிலான குழுவினரிடம், இலங்கை அதிகாரிகள் இது குறித்து விளக்கினர்.

நீழ்மூழ்கி மனித வெடிகுண்டு தாக்குதல் முறியடிப்பது குறித்தும், கண்டுபிடிப்பது குறித்தும் இந்திய கடற்படையின் உதவியை இலங்கை ராணுவம் கோரியுள்ளது. கடல் வழி தாக்குதலுக்காக தண்ணீர் ஸ்கூட்டர்களையும் விடுதலைப்புலிகள் பயன்படுத்துகின்றனர்.இலங்கையில் உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து, இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத்தும் கவலை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, கொழும்புக்கு கூடுதல் விமானப்படையினரையும், ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானங்களையும் அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

No comments: