பயங்கரவாதிகளுக்கும், சுதந்திரப் போராளிகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருப்பதாக கனடாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன தெரிவித்திருப்பதாக கனேடியப் பத்திரிகையான ‘நஷனல் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வடபகுதியை தனியான சுதந்திர அலகாகப் பிரகடனப்படுத்தவேண்டுமென கனடாவின் டவுன்ஸ் வியூ மைதானத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் முக்கிய உரையாற்றிய அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன கூறியிருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதனைவிட இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வு இல்லை” என அவர் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலங்குவானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தும் ஒளிப்படங்களைக் காண்பித்து இங்கு செனவிரட்ன, இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பல கொலைகளைச் செய்துவருகின்றது எனக் குற்றஞ்சாட்டியதாக நஷனல் போஸ்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பயங்கரவாதத்துக்கும், சுதந்திரப் போராட்டத்துக்கும் இடையில் தெளிவான வித்தியாசம் உள்ளது” எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர்,
தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணையவேண்டுமெனக் கோரிக்கை விடுத்ததாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் அமைப்பு கனேடிய அரசாங்கத்தால் மூடப்பட்டமைக்கும் பொங்குதமிழ் நிகழ்வில் கண்டனங்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன், கனடாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் பெருமளவானவர்கள் கலந்துகொண்டதாகவும்,
இந்த நிகழ்வு நடைபெறும் இடம் இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்பட்டதாகவும் நஷனல் போஸ்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்குதமிழ் நிகழ்வுக்குப் பொலிஸார் அனுமதி வழங்கக் கூடாது என ஐக்கிய இலங்கைத் தேசிய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளபோதும்,
அது ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனவும், விடுதலைப் புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடைசெய்துள்ள போதும்
அந்த அமைப்பின் கொடிகளைத் தாங்கியவாறு பெருமளவானவர்கள் பொங்குதமிழ் நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததாகவும் நஷனல் போஸ்ட் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
எனினும், தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் மோதல்களை முன்னெடுத்துள்ளது என வைத்தியர் செனவிரட்ன முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டை கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் பந்துல ஜெயசேகர மறுத்திருப்பதாகவும் நஷனல் போஸ்ட் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“விடுதலைப் புலிகளே பெருமளவான தமிழ் தலைவர்களைப் படுகொலை செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பு.
தனது மோசமான போரை கனடாவுக்கும் அது கொண்டுவந்துள்ளது” என பந்துல ஜயசேகர கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஒரு இலட்சத்துக்கும் அதிமானவர்கள் கலந்துகொண்டிருந்ததாக தமிழ் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment