திபெத் நாட்டு அகதிகளுக்கு இந்தியாவில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகள் மட்டும் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்தில் நிலம், வீட்டுமனை போன்றவற்றை வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையை நீக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை நினைவரங்கம் அருகே 3-7-2008 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்குக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையேற்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிருவாகிகள் உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் ஆற்றிய உரை:
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் சொத்துக்கள் வாங்கக்கூடாது என அண்மையில் தமிழக அரசு அறிவித்ததையடுத்து, இலங்கை தமிழ் அகதிகள் சொத்து வாங்கியிருக்கிறார்களா என்பதை அறிய கியூ பிரிவு உளவுத் துறையினர் அகதி முகாம்களில் விசாரித்து வருகின்றனர்.
இதனால் பல்வேறு இன்னல்களுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஈழத் தமிழ் மக்கள் ஆளாக்கப்படுகின்றனர்.
25 ஆண்டுகளுக்கு மேல் இம்மண்ணில் வாழ்ந்து வரும் தமிழ் ஈழ மக்களை அயல்நாட்டவர்களாக நடத்துவதை மனித நேயமற்ற செயலாகவே கருதவேண்டியுள்ளது.
இந்தியா முழுவதிலும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட திபெத் நாட்டு அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மதிப்பும் சுதந்திரமும் ஈழத் தமிழ் மக்களுக்கு அளிக்கப்படவில்லை. மாறாகக் கொத்தடிமைகளாக நடத்தப்படும் அவலமே தொடர்கிறது.
இந்நிலையில் தமிழக அரசு அயல் நாட்டவர்கள் சொத்துக்கள் வாங்கக்கூடாது என அறிவித்திருப்பது அவர்களின் துன்பத்தை அதிகரிப்பதாக உள்ளது.
எனவே கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்ததைப் போல 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இங்கே குடியிருப்போருக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.
சார்க் மாநாட்டையொட்டி கொழும்பு நகருக்கு இந்தியப் போர்ப்படைத் துருப்புகளும், போர்க் கப்பலும் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்திய அரசின் இந்நடவடிக்கை ஈழத் தமிழர்களுக்கு எதிரான செயலாகவே தோன்றுகிறது.
சிங்கள இனவெறியர்களுக்குத் துணைபோகும் போக்கை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் விடுதலைச் செழியன், சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tuesday, 22 July 2008
இலங்கைத் தமிழ் அகதிகளைக் கொத்தடிமைகளாக நடத்துவதா? திருமாவளவன் கண்டனம் - ஆர்ப்பாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment