தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்த அறிவிப்பானது என்ன நோக்கத்தைக் கொண்டமைந்துள்ளது என்பது பற்றி எமக்குத் தெரியாது. உயிர் மற்றும் சொத்து அழிவுகளை விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சி புலிகளின் அறிவிப்பை வரவேற்கின்றது.
இருப்பினும் இதனை ஏற்றுக் கொள்வதும் தவிர்ப்பதும் அரசாங்கத்தைப் பொறுத்த விடயமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட எம்.பி. யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது மேற்படி யுத்த நிறுத்த அறிவிப்பு குறித்து கேள்வியெழுப்பியபோதே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. இதனைக் கூறினார்.
அவர்மேலும் கூறியதாவது, யுத்த அழிவுகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகின்றது. அதுமட்டுமல்லாமல் யுத்தத்தினூடாக சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்பதிலும் உறுதியாக இருக்கின்றது.
ஆனால் அரசாங்கம் யுத்தத்தின் ஊடாகவே தீர்வு என்பதில் குறியாக இருக்கின்றது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் என்ற அறிவிப்பானது வரவேற்கக் கூடியதாகும். அத்துடன் அவர்களது இந்த அறிவிப்பு எந்த நோக்கத்தைக் கொண்டது என்பது குறித்து எம்மால் கூற முடியாது.
சில வேளைகளில் சார்க் தலைவர்களினதும் சர்வதேசத்தினதும் நல்லெண்ணங்களை சம்பாதித்துக் கொள்ளும் நோக்கமாகவும் இருக்கக் கூடும். எப்படி இருப்பினும் இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளுமே யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களது தீர்மானங்கள் குறித்து அவர்களே முடிவெடுக்க வேண்டும். அதேபோல் புலிகளின் அறிவிப்பு தொடர்பில் அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி யுத்தத்தையோ அதனூடாக ஏற்படுகின்ற அழிவுகளையோ விரும்பவில்லை என்பது மட்டுமே தெளிவாகும்
Tuesday, 22 July 2008
யுத்த நிறுத்தத்திற்கு ஐ.தே.க. வரவேற்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment