Sunday, 13 July 2008

வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள்சார்க் உச்சிமாநாடு நடைபெறும் காலப்பகுதியில்விடுதிகளில் தங்குவதைத் தடுக்க முயற்சி?

சார்க் உச்சிமாநாட்டுக்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் உச்சிமாநாடு நடைபெறும் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் கொழும்பிலுள்ள தற்காலிக விடுதிகளில் தங்கியிருப்பதைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்க் உச்சிமாநாடு நடைபெறவிருக்கும் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள்;


விடுதிகளில் தங்குவதைத் தடுப்பதற்குப் பொலிஸார் முயற்சிப்பதால், அனுமதிவழங்க விடுதி உரிமையாளர்கள் பின்னடிப்பதாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


“சார்க் உச்சிமாட்டைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொழும்பு விடுதிகளில் தங்கவிருக்கும் மக்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் குறித்து தகவல்களை நாங்கள் சேகரித்துள்ளோம்” என அவர் கூறியுள்ளார்.


எனினும், கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை உட்பட கொழும்பின் பல பாகங்களிலுமுள்ள விடுதிகளின் உரிமையாளர்கள்,

தமது விடுதிகளில் தங்கிவிருக்கும் வடக்கு, கிழக்குச் சேர்ந்தவர்களிடமிருந்து கிராமசேவகரின் அத்தாட்சிக் கடிதத்தைக் கோருவதுடன், அவர்களைப் பொலிஸில் பதிவுசெய்யுமாறு கோருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தாம் கொழும்புக்கு வந்த பின்னரே இது பற்றி அறிந்துகொள்வதாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ள போதும்,

விடுதிகளில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பலர் சொந்த இடங்களுக்குச் செல்லுமாறு பொலிஸாரால் பலவந்தப் படுத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடொன்றுக்குச் செல்வதற்காக வீசா அனுமதி பெற கடந்த ஏப்பிரல் மாதம் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளார்.

இவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, 50 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், தான் விடுவிக்கப்பட்ட பின்னரும் பொலிஸார் பலதடவை விடுதிக்குத் தொடர்புகொண்டு சொந்த இடத்துக்குச் செல்லுமாறு வற்புறுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல வேறு பல சம்பவங்களும் இடம்றெ;றிருப்பதாகக் கூறப்படுகின்றது.

எனினும், வடக்கு, கிழக்கைச் சேர்ந்தவர்களை விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு பொலிஸார் வற்புறுத்துவதாக வெளியாகியிருக்கும் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜீ.எம்.ஜெயரட்ன, இது தொடர்பாக இவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் தமக்குக் கிடைக்கப்பெறவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தமக்கு எந்தவிதமான முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லையென வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சோனைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரிகளும் கூறியுள்ளனர்.


கடந்த வருடம் ஜுன் மாதம் 7ஆம் திகதி கொழும்பிலுள்ள விடுதிகளிலில் தங்கிருந்த வடக்கு, கிழக்கைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் பொலிஸாரால் பலவந்தமாக அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர்.


எனினும், இந்த நடவடிக்கையைக் கண்டித்திருந்த உயர்நீதிமன்றம், அவ்வாறு அழைத்துச்செல்லப்பட்டவர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்துவருமாறு உத்தரவிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: