ஜே.வி.பி.யிலிருந்து பிளவுபட்டு புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள ஜே.என்.பி. கட்சியைச் சேர்ந்த 12 உறுப்பினர்களையும் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுவதற்கு ஜே.வி.பி. தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 12 உறுப்பினர்களும் ஜே.என்.பி. கட்சியை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும், அவர்கள் ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை
எனவும் கட்சி சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டாரவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. 2004ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஜே.வி.பி. 39 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
பிளவுபட்டு ஜே.என்.பி கட்சி ஆரம்பித்துள்ள உறுப்பினர்கள் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கை அறிக்கை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9ம் திகதி ஜே.என்.பி. உறுப்பினர்கள் தாங்கள் பாராளுமன்றத்தில் ஜே.என்.பி. கட்சியை பிரதிநிதித்துவப் படுத்துவதாக சபாநாயகருக்கு கடித மூலம் அறிவித்துள்ளனர்.
இந்த தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜே.என்.பி. சபாநாயகரிடம் தெரிவித்துள்ளது. ஜே.என்.பி. உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சதித் திட்டத்தில் சிக்கியுள்ளதாக ஜே.வி.பி. குற்றஞ்சாட்டுகின்றது.
ஜே.என்.பி. உறுப்பினர்கள் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை இழந்தால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் குறித்த வெற்றிடங்களுக்காக நியமிக்கப்படுவர் எனவும் ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:
Post a Comment