Wednesday, 16 July 2008

கொழும்பில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டனர்

கொழும்பு மாவட்டத்தில் இரண்டு தமிழ் இளைஞர்கள் இனந்தெரியாத ஆயுதக் குழுக்களால் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக சிவில் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஒருவர் வெள்ளவத்தையில் வைத்துக் கடத்தப்பட்டுள்ள அதேவேளையில் மற்றவர் நாராஹென்பிட்டியில் வைத்துக் கடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்ப்பாணம், சுழிபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 30 வயதான நாராயணசிங்கம் லோகநாதன் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போய்விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

கொழும்பில் வசித்துவரும் இவர் தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திங்கட்கிழமை மாலை தன்னுடைய வேலைத் தலத்தை விட்டுச் சென்ற இவர் வீடு திரும்பவில்லை என இவரது சகோதரி சிவில் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்திருக்கின்றார்.

இதேவேளையில் மலையகத்தின் தலவாக்கல பகுதியைச் சேர்ந்த 17 வயதான தமிழ் இளைஞர் ஒருவரும் முச்சக்கர வாகனம் ஒன்றில் வந்த இளைஞர்கள் சிலரால் நாரேஹென்பிட்டி பகுதியில் வைத்தக் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாகவும் அவரது உறவினர்கள் சிவில் கண்காணிப்புக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments: