Tuesday, 15 July 2008

அமெரிக்காவுக்கு தாதியரை அனுப்பும் உடன்படிக்கை

ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஆஸ்பத்திரிகளில் கடமை புரியவென இலங்கை தாதியரை அனுப்பி வைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று 15ம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்படவிருக்கிறது.

இந்த உடன்படிக்கையில் சுகாதார பராமரிப்பு போசாக்குத்துறை அமைச்சின் செயலாளரும், அமெரிக்காவின் எச்.சி.எல்.இன்டர்நேசனல் நிறுவன சர்வதேச வளத்தலைவர் ஒகன் கொல்ரிச் மெத்தவ்வும் கைச்சாத்திடவுள்ளனர்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காகவம், அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படவிருக்கும் முதற்தொகுதி தாதியரை தேர்ந்தெடுப்பதற்குமான நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்குமென அமெரிக்காவின் எச்.சி.எல் இன்டர்நேசனல் நிறுவனத்தின் நான்கு பிரதிநிதிகள் நேற்று கொழும்புக்கு வந்து சேர்ந்தனர்.

இவர்கள் எதிர்வரும் 17ம் திகதி வரையும் கொழும்பில் தங்கி இருப்பர். அமெரிக்காவிலுள்ள ஆஸ்பத்திரிகளில் பணிபுரிவதற்கென இலங்கையிலிருந்து வருடாவருடம் ஆயிரம் தாதியரை பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்கா தீhமானித்திருக்கிறது.

இந்தத் தீர்மானத்திற்கு ஏற்பவே இப்புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது. கொழும்புக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க நிறுவன பிரதிநிதிகள் தீவிர சிகிச்சை பிரிவிலும் பணியாற்றவென முதற்கட்டமாக 85 தாதியரைத் தேர்ந்தெடுபதற்கான நேர்முகப் பரீட்சையை நடத்தவிருக்கின்றனர்.

அமெரிக்காவிலுள்ள ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென தேர்ந்தெடுக்கப்படும் தாதியருக்கு ஆறுமாதகால பயிற்சி டுபாயிலுள்ள ஆஸ்பத்திரிகளில் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியை பூர்த்தி செய்யும் தாதியர்கள் அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கடமையாற்றவென சர்வதேச மொழிப் பரீட்சைக்கும், தொழில் நிபுணத்துவ பரீட்சைக்கும் உட்படுத்தப்படுவர். இதன் பின்னர் அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் பணிக்கு அமர்த்தப்படுவர்.

No comments: