Friday, 25 July 2008

போர்களத்தில் விஷ வாயு தயாரிக்க பயன்படும் இரசாயனம் திருட்டுத்தனமாக இறக்குமதி-அதிரடியாக ஐவர் கைது

விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்த தயோனீல் குளோரைட் என்ற ஆபத்தை விளைவிக்க கூடிய இரசாயனம் அடங்கிய கொள்கலனை சுங்க அதிகாரிகள் அண்மையில் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்படுவதாக கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது.

பாலசுப்ரமணியம் புஸ்பகுமார், எஸ்.நந்தகுமார், பேர்டும் டார்டின், ஏம்.எம்.எஸ்.சுபைர், லவ்ஜே, மற்றும் எம்.எஸ்.எம். இப்ராஹிம் ஆகியோரே கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கப்பல் நிறுவனம் ஒன்று, ஜேட்சு என்ற கப்பல் மூலம் சென்னை துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு அனுப்பிய கொள்கலனில் இருந்து இந்த ரசாயனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

பி.எஸ்.கே என்ற நிறுவனம், விளையாட்டு பொருட்கள் இறக்குமதி செய்யும் தோரணையில் இந்த இரசாயன கொள்கலனை வரவழைத்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


இந்த இரசாயனம் பயங்கரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாக என்பது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


தயோனீல் குளோரைட்டை போர்களத்தில் விஷ வாயுவாக பயன்படுத்த முடியும், இந்த இரசாயனத்தை ஏவுகணை, எறிகணை, மற்றும் குண்டுகளில் பயன்படுத்தி பரவச் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

கைப்பற்றபட்ட கொள்கலனில் இருந்து ஆயிரத்து 456 தயோனீல் குளோரைட் போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த போத்தல்கள் 500 மில்லிமீட்டர் கொள்ளவு கொண்டவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: