வடக்கு, கிழக்கில் இடம்பெறும் போர் குற்றச்சாட்டுக்கள், மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான மீறல்கள் தொடர்பாக இலங்கை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என பரிசை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகளுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதுடன், அவர்களுக்கு சர்வதேச உதவிகள் சென்றடைவதை இலங்கை அரசாங்கம் தடுத்திருப்பதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
குற்றச்செயல்களின் உண்மையான நிலைப்பாடு வெளிப்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியிருப்பதுடன், இதற்காக பயங்கரவாதத்துக்கு எதிரான கொள்கை மற்றும் உள்நாட்டுப் பிரச்சினையை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்வதாகவும் மனித உரிமைகளுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.
“இராணுவம், புலனாய்வுத் துறை, தூதுவர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகவல் நிறுவனங்கள், நீதித்துறை போன்ற அனைத்து அரசாங்கக் கட்டமைப்புக்களையும் 7 இலட்சம் அகதிகளுக்கும் எதிராக இலங்கை அரசாங்கம் பயன்படுத்தி உள்ளது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளது. இதில் 5 இலட்சம் பேர் பாதுகாப்புத் தேடி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்;” என மனித உரிமைகளுக்கான தமிழர் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதிரான போர் குற்றங்கள் மற்றும் மனிதமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும் எனவும் மனித உரிமைகளுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment