Friday, 25 July 2008

ஊடகசுதந்திரம் மீதான அச்சுறுத்தல், ஜனநாயகத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்- ஜே.வி.பி.

சுதந்திரமான வெளிப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டால், அது ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலாக அமையும் என ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ஐந்து ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடிபோதே அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஜே.வி.பி. எப்பொழுதும் ஆதரவாக இருப்பதுடன், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் எனவும் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

ஜனநாயக ரீதியில் தேர்வுசெய்யப்பட்ட அரசாங்கம் தொடர்பான சுதந்திரமான விமர்சனங்கள் முன்வைப்பது தற்பொழுது ஊடகங்களுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பதாகவும், வன்முறைகளில் ஈடுபடுவது அரசாங்கத்தின் கொள்கையாக மாறிவிட்டது எனவும் தன்னைச் சந்தித்த ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம், ஜே.வி.பி.யின் தலைவர் கூறினார்.

ஊடகசுதந்திரம் மீதான அச்சுறுத்தலால் ஊடக சமூகத்திலிருக்கும் குரல்கள் ஒடுக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட சோமவன்ச அமரசிங்க, ஊடக சுதந்திரத்துக்கு எதிரான போராட்டங்களில் ஜே.வி.பி. ஊடக அமைப்புக்களுக்கும், ஊடகத் தொழிற்சங்கங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கும் என உறுதிமொழி வழங்கியுள்ளார்.

ஊடக ஒடுக்கு முறைகளுக்கு எதிராக எடுத்தவாரம் வெளியிடப்படவிருக்கும் அறிக்கையிலும் ஜே.வி.பி. கைச்சாத்திட்டுள்ளது.

உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சனத் பாலசூரிய, செயலாளர் போத்தல ஜயந்த, காஞ்சன மாரசிங்க மற்றும் நயனக்க ரன்வெல ஆகியோர் ஐந்து ஊடக அமைப்புக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தியிருந்தனர். ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன், ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments: