இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களை இறால்குழியிலும், சின்னக்குளத்திலும், குடியமர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்விடங்களை ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் வழித்துணையுடன் நேரில் சென்று பார்வையிட்ட சம்பூர் பிரதேச குடியிருப்பாளர்கள் அதை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த அகதிகளாக தங்கியிருக்கின்றார்கள்.
மூதூர் கிழக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன், புதிய குடியேற்றத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ள இடம், மக்கள் வாழ்வதற்கோ, தொழில் செய்வதற்கோ, சம்பூர் பிரதேசத்துடன் ஒப்பிடும் போது பொருத்தமற்றது என்றார்.
இடம் பெயர்ந்துள்ள குடும்பங்கள் விருப்பத்திற்கு மாறான இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என மீள் குடியேற்றத்துறை அமைச்சரான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment