Thursday, 24 July 2008

விடுதலைப் புலிகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாது- ஊடகத்துறை அமைச்சர்

விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பை ஏற்று இராணுவத் தாக்குதல்கள் நிறுத்தப்படாது என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

சார்க் மாநாட்டை முன்னிட்டு இம்மாதம் 26ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதிவரை விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சப் போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டிருந்தனர். எனினும், இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கையை

ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்தது.


இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அறிவித்த போர்நிறுத்த காலப்பகுதியில் விமானத் தாக்குதல்களையும், தரைவழித் தாக்குதல்களையும் இடைநிறுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கூறியிருந்தார்.


எனினும், இன்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்; ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அவ்வாறான தீர்மானம் எதனையும் அமைச்சரவையில் எடுக்கவில்லையெனக் கூறினார்.


விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர், விடுதலைப் புலிகளின் பகுதிகளில் தொடர்ந்தும் விமானத் தாக்குதல்களும், தரைவழித் தாக்குதல்களும் தொடரும் எனவும் கூறினார்.

பாதுகாப்புத் தரப்பினரின் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகள் பலமிழந்திருக்கும் வேளைகளில் போர்நிறுத்தங்களை அறிவித்து அந்தக் காலப்பகுதியில் பலமடைந்து வருவது பற்றித் தமக்கு நன்கு தெரியும் எனவும்,

இனிமேலும் அதற்கு அனுமதிக்கப்போவதில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் கூறினார்.

No comments: