Thursday, 24 July 2008

கிழக்கு சிங்களமயமாகிறது எனும் குற்றச்சாட்டு கேலிக்குரியது என்கிறார் சம்பிக்க ரணவக்க

கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் கேலிக்குரியவை எனக் குறிப்பிட்டுள்ள சுற்றாடல் மற்றும் இயற்கைவள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, உண்மையிலேயே கடந்த சில வருடங்களாக கிழக்கில் சிங்களவர்களின் சனத்தொகை குறைவடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்குக் கிழக்கு விவகாரம் தொடர்பில் நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் அமபாறை மாவட்டத்தில் சிஙகளவர்களின் சனத்தொகை 2001 இல் 236,583 இலிருந்து 2007 இல் 228,938 ஆக குறைவடைந்துள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேகாலப்பகுதியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகை 249,620 இலிருந்து 268,630 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கிழக்கை சிங்களமயப்படுத்த முயற்சி செய்கின்றது எனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ரணவக்க, கிழக்கின் மோதல்களால் சிங்கள மக்களும் துன்பங்களை அனுபவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தற்போது முன்கொண்டு செல்லப்படும் இராணுவ நடவடிக்கையானது தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாதத்தை தோந்கடித்து தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான போராட்டமே இது எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு குறித்து கவனமாக இருக்க வேண்டும் எனவும், வெளிநாடுகளின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டியது அத்தியவசியமானது எனவும் குறிப்பிட்டுள்ள சம்பிக்க ரணவக்க பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரமிக்க மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை விடுக்கப்படுவதானது பயங்கரவாதிகள் தம்மை மீளவும் ஒழுங்கமைத்துக் கொள்ள சந்தர்ப்பமளிப்பதாக அமைந்துவிடும் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments: