வடக்கு, கிழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் தென்பகுதிச் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுப்பதாக பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் பணியாற்றும் அதிகாரிகள் விசாரணைகள் இடம்பெறும் தவணைகளில் நீதிமன்றங்களுக்கு ஆஜராகாததால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும்
அப்பாவிகள்கூட நீண்ட நாட்களாகத் தடுத்துவைக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக வெலிக்கடைச் சிறைச்சாலையில் புதிய நீதிமன்றத்தைத் திறைந்துவைத்து உரையாற்றிய பிரதம நீதியரசர் குறிப்பிட்டார்.
அடையாள அட்டை இல்லையென்று கைதுசெய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்கள மொழி தெரியாததாலேயே கைதுசெய்யப்படுவதாகவும், இந்த நிலைமை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.
நீதித்துறையுடன் இணைந்து பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் கொள்கைகளை வகுப்பதன் மூலமே இந்த நிலைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரமுடியும் எனவும், உயர்நீதிமன்றம் மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் நீதியரசர் கூறினார்.
பலாலியை அரசாங்கப் படைகள் கைப்பற்றியதன் பின்னர் பெரும்பகுதி நிலப்பரப்பு பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதாகவும்,
தற்பொழுது அந்தப் பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் பிரதம நீதியரசர் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்தவர்கள் எந்தவிதமான பயங்கரவாதச் செயற்பாடுகள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லையாயின் அவர்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தமுடியும்.
இது தொடர்பாக ஆராய்வதற்கு உயர்நீதிமன்றம் குழுவொன்றை நியமித்திருப்பதாகவும் அங்கு மேலும் உரையாற்றிய பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா மேலும் கூறினார்.

No comments:
Post a Comment