இலங்கையில் இம்மாத முடிவிலும் அடுத்த மாத நடுப்பகுதியிலும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. முதலாவது, கொழும்பில் நடைபெற இருக்கும் சார்க் எனப்படும் தென்னாசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான சங்கத்தின் உச்சி மாநாடாகும். அடுத்தது, வடமத்திய சப்ரகமுவ மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தல்களாகும். இவ் இரண்டு நிகழ்வுகளையும் உற்று நோக்குமிடத்து அவை பொதுத்தன்மைகளின் அல்லது தேவைகளின் அடிப்படையில் நடாத்தப்படுபவை அல்ல என்பது புரியும். இவை முற்றிலும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சியினதும் அதன் கீழான அர சாங்கத்தினதும் இருப்பு, எதிர்காலத் தேவை கருதியே முன்னெடுக்கப்படுகின்றன என்பதே உண்மையானதாகும். சார்க் உச்சி மாநாடு இம்முறை மாலைதீவில் நடத்தப்பட வேண்டியதாகும். அங்குள்ள நிலைகள் அதற்கு இடமளிக்காத சூழலில் இங்கு நடாத்தப்படுகின்றது. இதனை வலிந்து ஏற்றுக்கொண்டது இலங்கை அரசாங்கம். இங்குள்ள யுத்த சூழலும் பொருளாதார நெருக்கடிகளும் அதன் காரணமான அமைதியற்ற சூழலும் நீடித்துவரும் நிலையில், பெருந்தொகைப் பணச் செலவும் வளங்களின் விரையங்களுடனும் இப்படி ஒரு மாநாடு நடாத்தப்படுவதன் பலாபலன் தான் என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. ""சுண்டற்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்' என்ற ரீதியில் தான் இச் சார்க் மாநாடு நடாத்தப்பட இருக்கின்றது. இந்த மாநாட்டிற்காக இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ள உத்தேசத் தொகை இருநூற்றி எண்பது (2.8 பில்லியன்) கோடி ரூபாய்களாகும். இதற்கான குறைநிரப்புப் பிரேரணையை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால், மாநாடு முடிவுற்ற பின் குத்துவிளக்கில் அரசாங்கம் கணக்குப் பார்க்கும் போது மேலும் பலநூறு லட்சங்கள் செலவாகி இருப்பதையே காண முடியும். இந்தப் பணம் யாருடைய பணம் என்பது தான் சிந்திக்க வேண்டியதாகும். இவ்வளவு பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து நடாத்தப்படும் இம் மாநாடு இலங்கைக்கோ அல்லது அங்கத்துவ நாடுகள் என்பனவற்றுக்கோ கொண்டுவரும் பலாபலன்கள் தான் என்ன. இந்த மாநாட்டின் உச்சப் பலனை அடையக் கூடியதாக உள்ள ஒரே நாடு இந்தியாவாக மட்டுமே இருக்க முடியும். இந்தியா இப்பிராந்தியத்தின் மேலாதிக்க வல்லரசாக இருப்பதாலும் அதன் பொருளாதார அரசியல் இராணுவ நோக்கங்கள் சமத்துவமற்ற வகையில் ஏனைய ஏழு நாடுகளையும் தனது ஆதிக்கத்தில் வைத்திருப்பதையே நோக்காகக் கொண்டிருப்பதாலும் இச் சார்க் அமைப்பு இந்தியாவிற்கே அதிகளவு அனுகூலங்களைக் கொண்டதாகவே இருந்துவருகின்றது. இந்த அமைப்பில் உள்ள நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேசம், இலங்கை, மாலைதீவு என்பன ஏற்கெனவே இந்தியாவுடன் முரண்பாடுகளுடன் இருந்து வந்த நாடுகளாகும். இப்போது ஆப்கானிஸ்தானும் இணைந்துள்ளது. இவற்றில் பாகிஸ்தான் தவிர்ந்த நாடுகள் ஏற்கனவே இந்தியாவின் நலன்களையும் தேவைகளையும் மீறிச் சென்றதில்லை. அவ்வாறு செல்வதற்கு இந்திய மேலாதிக்கம் அனுமதிக்கப் போவதும் இல்லை. எவ்வாறு சமத்துவமற்றும் தன் சுய தேவைகளின் அடிப்படையிலும் இந்நாடுகளை இந்தியா நடாத்தி வந்தாலும் ""பெரியண்ணனைப்' பகைக்கக்கூடாது என்ற பணிந்துபோகும் மனப்பான்மையுடனேயே இந்நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் நடந்து வந்துள்ளன. இந்நிலையை இந்தியா இச் சார்க் அமைப்பின் ஊடாகப் பேணி வருவதிலேயே அக்கறை செலுத்தி வந்துள்ளது. பாகிஸ்தான் தவிர்ந்த ஏனைய சார்க் அங்கத்துவ நாடுகளில் உள்ள வளங்கள் மீது மூலதன ஆதிக்கம் வகிப்பதில் இந்தியா முனைந்து நிற்கின்றது. வர்த்தக ஒப்பந்தங்களில் தன் நிலை பேணிக் கொள்வதில் எப்பொழுதும் அக்கறையாக இருந்து வருகின்றது. அவ்வாறே இந்நாடுகளில் இடம்பெறும் ஆட்சி அதிகார சக்திகள் தனக்கு எதிராகச் செல்வதைத் தடுப்பதில் எப்பொழுதும் கவனத்துடன் இருந்தும் வருகின்றது. இந்நாடுகளின் அரசியல் இராணுவ முன்னெடுப்புகள் யாவும் தனக்குச் சாதகமாகவும் தனது கட்டுப்பாட்டை மீறிச் செல்லாத வகையிலும் அமைந்திருப்பதை இந்தியா எப்பொழுதும் உறுதிசெய்து வந்துள்ளது. ஏதாவது ஒரு நாடு இந்நிலையை மீற முற்பட்டால் அதற்கான தண்டனையை எந்தவொரு பெயரிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வழங்கத் தயாராக உள்ள ஒரு மேலாதிக்க நாடாகவே இந்தியா தன்னை வளர்த்து வந்துள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு சார்க் அமைப்பு இந்தியாவைப் பொறுத்தவரை பயன்உள்ள ஒரு கருவி என்று கூறுவது மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்று அல்ல. அதேவேளை, இத்தகைய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பால் தமக்கு பெயரளவிலான நன்மைகள் கிடைக்காதுவிடினும் மாறி மாறிக் கிடைக்கும் சார்க் அமைப்பின் தலைமைப் பாத்திரத்தை பெறுவதைக் காட்டி தத்தமது நாடுகளின் தலைமைகள் அரசியல் இருப்பிற்கு ஆதாயம் தேடிக்கொள்வதில் மட்டுமே முயன்று வந்துள்ளனரே தவிர அதற்கு அப்பால் வேறொன்றும் இல்லை. அந்த வகையில் இம் முறைக்கான தலைமைப் பதவியை இலங்கை பெற்றுக்கொள்ள இருக்கிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இத் தலைமைப் பதவியைப் பெறுவதன் மூலம் தனது மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் செல்வாக்கை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிலைநிறுத்த முயற்சி செய்வார் என்பதில் ஐயமில்லை. \அதற்காகவே இருநூற்றி எண்பது கோடி ரூபா செலவில் இம் மாநாட்டை இலங்கையில் நடாத்த முன்வந்து கொண்டார். இங்குள்ள பொருளாதார அரசியல், யுத்த சூழல் இவ்வகை மாநாடு அவசியமற்றது என்பதையே வெளிப் படுத்தி நிற்கின்றன. அதன் காரணமாகவே ஒதுக்கப்பட்ட 2.8 பில்லியன் ரூபாவில் 75 வீதம் மாநாட்டின் பாதுகாப்புத் தேவைக்குச் செலவிடப்படுகிறது. அத்துடன், பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு சோதனைகள், காவல்கள், வீதி மூடல்கள், வேலைத்தலங்கள் கண்காணிக்கப்படுதல்கள் என விடயங்கள் விஸ்தரிக்கப்படுகின்றன. பொருளாதார நெருக்கடிமிக்க ஒரு நாட்டில் ஒவ்வொரு நிமிட வேலைகளும் உழைப்பும் பொன் போன்றதாகப் பேணப்படுவதே முறையானதாகும். ஏற்கனவே உலகிலேயே விடுமுறைகள் கூடிய நாடாக இலங்கை இருந்துவரும் போது வருமானம் ஏதுமற்ற நமது மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குகின்ற சார்க் மாநாடு மேலும் நமது பொருளாதாரத்திற்கு மேலதிகச் சுமையாக அமையப் போகிறது. இம் மாநாட்டால் மேலும் வீதியோரச் சிறு கடைகளும் வீடுகளும் இடித்துத் தள்ளப்படுகின்றன. கொம்பனித்தெருப் பகுதியில் எழுநூறு வீடுகள் பாதுகாப்புக்காக அப்புறப்படுத்தப்படவுள்ளன. சுமார் 60 வருடங்களாக அங்கு வாழ்ந்து வந்த சாதாரண குடும்பங்கள் நிர்க்கதியாகி உள்ளன. இவை சார்க் மாநாட்டிற்காக மக்களையும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கை என்றால், மறுபுறத்தில் இந்தியப் படைகளின் வருகையானது நாட்டின் இந்திய இறைமை, சுதந்திரம், சுயாதிபத்தியத்தின் மீது கேள்வியை எழுப்பி நிற்கிறது. இந்தியப் பிரதமரின் பாதுகாப்பிற்கு எனக் கூறி மூவாயிரம் இந்தியப் படையினர் வர உள்ளனர். அத்துடன், இரண்டு நாசகாரிக் கப்பல்கள் இலங்கையில் கடற்பரப்பில் தரித்து நிற்பதுடன், அதன் உலங்கு வானூர்திகள் கடற் கண்காணிப்பிலும் ஈடுபட உள்ளன. அவ்வாறே விமானப் படையினரும் கண்காணிப்பில் வான வீதியில் வட்டமிட உள்ளனர். கொழும்புத் துறைமுகம் உட்பட பிரதான துறைமுகங்களும் இந்தியப் படைகளின் கண்காணிப்பிலும் பாதுகாப்பிலும் இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இவற்றுடன் இந்தியப் படைகளின் உயர் அதிகாரிகள் றோ உளவுப் பிரிவினர், அரசியல் உயர் அதிகாரிகள் போன்றவர்கள் பிரசன்னமாக இருப்பர். கொழும்பின் பிரதான இடங்கள் யாவற்றிலும் இந்தியப் படையினரும் அதிகாரிகளும் இருக்கப் போகிறார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனுமதியை ஏற்கனவே இலங்கைக்குத் திடீர் பயணம் செய்த மூன்று உயர் இந்திய அதிகாரிகள் இலங்கை ஜனாதிபதியிடம் பெற்றுச் சென்றனர். இவ்வாறான படை பட்டாள வருகை ஏன்? இந்தியப் பிரதமரையோ ஏனைய தலைவர்களையோ பாதுகாக்கும் திறன் இலங்கைப் படைகளிடம் இல்லையா? அல்லது அவற்றின் மீது இந்திய ஆளும் வர்க்கத்திற்கு நம்பிக்கை இல்லையா? இவ்வாறு இந்திய முப்படைகள் இங்கு வருவதும் செயல்படுவதும் இலங்கைப் படைகளுடன் கூட்டுச் சேர்ந்தா அல்லது தன்னிச்சையான செயற்பாடாக அமையுமா? இவ்வாறு இந்தியப் பிரதமரைப் பாதுகாக்க மூவாயிரம் படைகளும் இரண்டு நாசகாரிகளும் வான் படைகளும் வருவதென்பது ஆச்சரியம் தருவதாக இருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னால் வேறு வகைச் செய்திகள் உள்ளன என்றே நம்பப்படுகின்றது. இலங்கை அரசாங்கப் படைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் புலிகள் இயக்கத்திற்குரிய வலுவான எதிர்மறைச் செய்தி ஒன்று இருக்கின்றது. அதேவேளை, மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் எதிர்கால முடிவுகள் எடுப்பதற்கான சமிக்ஞை செய்தியும் உள்ளடங்கி உள்ளது. சீன, பாகிஸ்தான் நாடுகள் இலங்கையில் தலையிடுவதைத் தடுப்பதற்கான ஒரு ஆரம்ப ஒத்திகையாக சார்க் மாநாட்டுப் பாதுகாப்பை இந்தியா சாட்டாக வைத்து அதன் ஊடாக ஒரு காட்சிப்படுத்தலைக் காட்டுவதாகவே இந்திய ஊடகங்கள் சித்திரிக்கின்றன. அதில் உண்மை இல்லை எனக் கூறமுடியாது. அதேவேளை, இலங்கை இனப்பிரச்சினையில் தலையீடு செய்வதற்கு மீண்டும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ள அமெரிக்க மேற்குலக நாடுகளுக்கும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு கனமான செய்தியை இச்சார்க் மாநாட்டுப் பாதுகாப்பு வியூகத்தின் ஊடாக முன்வைத்துள்ளனர் என்பதும் நோக்குதற்குரியதாகும். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டரை வருடங்களுக்கு முன்பு பதவிக்கு வந்த கையோடு நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கோலாகலப் பயணம் மேற்கொண்டு புதுடில்லி சென்றமை நினைவுக்கு வருகிறது. அவ்வேளை, புதுடில்லியின் கொள்கை வகுப்பாளர்கள் அதிகம் மகிந்தவைக் கவனித்துக்கொள்ளவில்லை. கொஞ்சம் விட்டுப்பிடித்துப் பார்த்துக் கொள்ளவே விரும்பினர். அதில் மனநிறைவு ஏற்பட்ட சூழலிலேயே கடந்த மாதம் மூன்று உயர் இந்திய அதிகாரிகள் திடீர்ப் பயணம் செய்து இரகசியப் பேச்சு நடாத்தி தமக்குரிய உத்தரவாதங்களை வாங்கிச் சென்றனர். படை இறக்கம் மட்டுமன்றி, மன்னார் பிரதேச எண்ணெய் வள ஆய்வு ஒப்பந்தம் ஜனாதிபதி முன்னிலையில் செய்யப்பட்டும் உள்ளது. அடுத்து காங்கேசன்துறை சீமெந்து ஆலையும் இந்தியாவசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினை ஒன்று இருப்பதும் அதன் காரணமான யுத்தம் வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களைத் தத்தமது பூர்வீக இடங்களில் இருந்து துரத்தியும் உள்ளது. அத்தகைய இடங்களே கிழக்கில் சம்பூரும் வடக்கில் காங்கேசன்துறையுமாகும். இவ்விரு இடங்களிலும் மக்கள் மீளக்குடியமர மறுக்கப்படும் சூழலில், இந்தியா எவ்வித கூச்சமும் இன்றித் தனது மூலதனத்தை அங்கு இறக்கிக் கொள்ள முன்வந்திருக்கிறது. மூலதனத்திற்கும் லாபக் குவிப்பிற்கும் இன மொழி உணர்வு என்பது கிடையாது என்பதை இப்போதாவது நம் நாட்டுத் தமிழ்த் தேசியவாத இந்திய விசுவாசிகள் உணர்வார்களா என்பது சந்தேகமேயாகும். இது நிற்க, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. அதாவது, துப்பாக்கிச் சூடுகள், அடிபிடி தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. ஜனநாயகம் வெறும் திரை மட்டுமே. அதற்குப் பின்னால் பணம், சொத்து, சுகங்கள் மட்டுமன்றி, அதிகாரம், பதவிகளும் பலாத்காரங்களும் முக்கியமானவையாகும். அதுவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் யாவும் ஆளும் தரப்பிற்கு சாதகமானவையாகவே விடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வேளை தேர்தல் ஆணையாளர் அண்மையில் கூறிய இரண்டு கருத்துகள் கவனத்திற்குரியன. மக்களுக்கு சேவை செய்வோராக இருந்தால் மக்களுக்குத் தத்தமது கொள்கைகளை விளங்கவைக்க வேண்டும். அதை விடுத்து தாக்குதல்கள் நடாத்தி வெற்றி பெறுவது மக்களுக்கு சேவை செய்வதற்கு அல்ல என்று கூறியிருந்தார். இரண்டாவது இன்றைய தேர்தல் முறைமையும் விகிதாசாரத்தின் கீழான விருப்பு வாக்குமுறையும் பல்வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. எனவே, இத்தேர்தல் முறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். அவரது அனுபவபூர்வமான கூற்றை அதிகாரத்தில் உள்ளவர்களும் எதிர்த்தரப்பில் உள்ளவர்களும் எவரும் காதில் வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லை. ஏனெனில், கடந்த 30 வருடகால நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் அதன் கீழான விகிதாசாரத் தேர்தல் நடைமுறைகளும் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருப்போருக்கு சுகங்களையும் சொத்துகளையும் வழங்கி வருவதில் காமதேனுவாகவும் கற்பக தருவாகவும் இருந்து வந்துள்ளன. ஆனால், இந்நாட்டின் உழைக்கும் மக்களும் தேசிய இனங்களும் தான் சிலுவை சுமந்து கல்லுமுள்ளுப் பாதையில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆதலால், இருநூற்றி எண்பது கோடி ரூபா செலவிட்டு நடாத்தப்படவுள்ள சார்க் உச்சி மாநாட்டினால் அரிசிக்கும் மாவிற்கும் பாணிற்கும் தினம் தினம் அல்லாட&
காலகண்டன்
Friday, 18 July 2008
சார்க் மாநாட்டால் உச்ச பலனை அடையப்போவது இந்தியா மட்டுமே
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment