Friday, 25 July 2008

புதிய வகை ராடார்களை களமுனைகளுக்கு நகர்த்தியுள்ள சிறிலங்கா இராணுவம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நவீனரக ஆயுதங்களை கண்டறியும் புதிய ரக ராடார்களை கொள்வனவு செய்துள்ள சிறிலங்கா அரசு, அவற்றை உடனடியாக களமுனைகளுக்கு நகர்த்தியுள்ளதாக இராணுவ வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது,

விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல் ஒன்றை எந்நேரமும் ஆரம்பிக்கலாம் என்ற அச்சம் இராணுவ மட்டத்தில் தீவிரமாக பரவியிருப்பதால், அதற்குரிய சகல முன்னேற்பாடுகளையும் அரசு தரப்பு மேற்கொண்டுவருகின்றது என்றும் அதன் ஒரு அங்கமாக, சிறிலங்கா இராணுவத்தின் இலத்திரனியல் போர் தளவாடங்களில் புதிய வகைகளை இணைத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் புதிய ஆயுதங்களை உபயோகிப்பதை உணர்ந்துள்ள இராணுவம், அவற்றின் தாக்குதல் தளங்களை அறியும் பொருட்டு புதிய வகை ராடர்களை ஆசிய நாடு ஒன்றிடமிருந்து கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழு அளவிலான வலிந்த தாக்குதல் ஒன்றை விடுதலைப் புலிகள் ஆரம்பிக்கும் முன்னர், அவசர அவசரமாக கொள்வனவு செய்யப்பட்ட இந்த புதிய வகை ராடர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மணலாறு பகுதிகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஆயதம் ஒன்றின் மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினால், சுமார் ஐந்து விநாடிகளுக்குள் அந்த ஆயுதம் எங்கு வைத்து இயக்கப்படுகிறது என்பதை கண்டறியும் சக்திகொண்ட இந்த புதிய வகை ராடர், அதனுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஆட்லறிகளை, விடுதலைப் புலிகளின் குறிப்பிட்ட ஆயுதம் அமைந்துள்ள தளத்தை நோக்கி தாக்குதல் நடத்துவதற்கான கட்டளையை வழங்கும் என்று இந்த புதிய வகை ராடர் தொடர்பாக இராணுவ வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

கடந்த மே மாதம் அமெரிக்ககாவிடமிருந்து இந்தியா பெற்றுக்கொண்ட புதிய ரக ராடார்கள் போன்ற அமைப்பு கொண்டவற்றையே தற்பொது சிறிலங்கா கொள்வனவு செய்திருப்பதாகவும் இவை இந்தியா வாங்கியவை போல் அல்லாது விலை குறைந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: