காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணசபைகளுக்குப் பகிரக்கூடிய அதிகாரப் பகிர்வுத்திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொடுக்கும் தேசிய அமைப்பின் முதலாவது பேராளர் மாநாட்டில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அதிகாரப் பகிர்வுத் திட்டத்துக்கு ஆதரவு வழங்குபவர்கள் இணைந்து இந்த தேசிய அமைப்பை உருவாக்கியிருப்பதாகவும், மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
“ஈழம் என்ற பதம் தொடர்பில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய வகையில், தமிழ்நாட்டைப் போன்று அமைந்திருக்க வேண்டும்” என்றார் நீதியமைச்சர்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உறுதியானதும், இறுதியானதுமான தீர்வென்றால் அது சமஷ்டி முறையான தீர்வே எனவும், பதங்களில் தொங்கிக்கொண்டிருக்காமல் நடைமுறைச்சாத்தியமான தீர்வை முன்வைக்கவேண்டும் எனவும் அமைச்சர் தனது உரையில் கூறினார்.
13வது திருத்தச்சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டே பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்கின்றனர்- ராஜித சேனாரட்ன
அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டு சத்திய்பபிரமாணம் செய்தே அனைவரும் பாராளுமன் உறுப்பினர்களாவதாகவும், எனவே, எவரும் அதிகாரப்பரவலாக்கலை எதிர்க்கமுடியாது எனவும் நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் துறை அமைச்சர், டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
மாகாணசபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்ட மாகாணங்களில் ஏதேனும் சீர்கேடுகள் இடம்பெறுமாயின் அந்த அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வது பற்றிய பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான தேசிய இயக்கமொன்றை உருவாக்குவதற்கு சில அமைச்சர்கள், உள்ளூர் மற்றம் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடம் தங்கியிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியிருந்தது.
அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, டிலான் பெரேரா மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே மற்றும் மக்கள் கட்சியின் ரஞ்சித் நவரட்ண ஆகியோர் இந்த தேசிய இயக்கத்துக்கு முன்னிலை வகிப்பதாக ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரட்ன தேரர் தெரிவித்திருந்தார்.

No comments:
Post a Comment