திருமதி நவநீதம் பிள்ளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக யூலை 24 அன்று அறிவிக்கப்பட்டு உள்ளார். இவ்வறிவித்தலை ஐநா செயலாளர் நாயகம் பங்கி மூன் யூலை 24ல் வெளியிட்டார். யூலை 28ல் ஐநாவின் பொதுச்சபை கூடி இவரது நியமனத்தை உறுதிப்படுத்தும்.
நவநீதம் பிள்ளையின் கருக் கலைப்புக்கு சாதகமான நிலைப்பாடு மறறும் தென்னாபிரிக்க அரசுக்கு சார்பானவர் என்ற குற்றச்சாட்டும் ஆரம்பத்தில் அமெரிக்காவிடம் இருந்து எதிர்ப்பு ஏற்பட்டது. இது பின்னர் கைவிடப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய ஆணையாளர் கனடாவைச் சேர்ந்த லூயிஸ் ஆர்பருக்கு பதிலாகவே இவர் நியமிக்கப்படவுள்ளார்.
நிறவெறி மிகுந்த அன்றைய தென் ஆப்பிரிக்காவில், இந்தியப் பெண்ணாண இவர் முதல் பெண் நீதிபதியாக உயர்ந்ததே மாபெரும் சாதனை. இவர் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகக் 2003 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர். தன் வாழ்க்கை முழுக்கவுமே பல வேதனைகளை சந்தித்த இவர் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தென் ஆப்பிரிக்காவில் தான். ஏழை குடும்பத்தில் ஒரு பஸ் டிரைவரின் மகளாகப் பிறந்த இவரை, உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் யூனிவர்சிட்டி வரை சென்று சட்டம் படிக்கச் செய்தது இவருடைய அம்மா.
”என் அம்மாவை என் தாத்தா பள்ளிக்கு அனுப்ப வில்லை. எழுத, படிக்க தெரிந்து விட்டால், என் அம்மா யாருக்காவது காதல் கடிதம் கொடுத்து விடுவாரோ என்கிற பயம் காரணமாம். தனக்கு நேர்ந்த கொடுமை எங்கள் நால்வருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அம்மா மிகுந்த கவனத்துடன் இருந்தார். பெண்களுக்கு கல்வியும் சுதந்திரமும் அவசியம் என்று அவர் நம்பியதால்தான், இன்று நான் இப்படி ஒரு பதவியில் வந்து உட்கார்ந்திருக்கிறேன்!’ என சர்வதேச குற்றிவியல் நீதிமன்ற நிதிபதியான போது தெரிவித்திருந்தார் நவநீதம் பிள்ளை. விடுதலை பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவர் இக்கருத்தை தெரிவித்தார்.
நவநீதம் பிள்ளை தனது சொந்த நாடான தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விடயத்தில் நல்ல அனுபவத்தை பெற்றிருந்தார். 1950களில் வழக்கறிஞராக பணியாற்ற ஆரம்பித்த போதே, நிறவெறிக்கு எதிராக மிகுந்த உறுதியுடன் குரல் எழுப்பினார். இதற்காக அப்போதைய தென் ஆப்பிரிக்கா நிறவெறி அரசால் இவர் சந்தித்த பிரச்சினைகள் பல. ஒரு கட்டத்தில் இவருடைய பாஸ்ட்போட் பறிக்கப்பட்டது. அதற்கெல்லாம் அசந்து விடாமல் சட்டத்தின் மூலமே தன்னைத் தற்காத்துக் கொண்டதோடு, நிற வெறியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்தும் போராடினார்.
தென்னாபிரிக்க வம்சாவளியாக இருந்தமையால் நவநீதம் பிள்ளை அந்தநாட்டின் முன்னாள் நிறவெறி அரசாங்கத்தினால், 28 வருடங்களாக நீதிபதி சம்மேளனத்தில் இணைக்கப்பட வில்லை. இதன் பின்னரே 1995 ஆம் ஆண்டு அவர் தென்னாபிரிக்காவின் முதல் பெண் மேன்நீதிமன்ற நீதிபதியாகத் தெரிவானார்.
”நிற வெறிக்கு எதிராக 28 ஆண்டுகள் போராடினேன். சட்டக் கல்லூரியில் வெள்ளையர் அல்லாதவர்களுக்கான தனி வகுப்பறையில் படித்துத்தான் சட்டம் முடித்தேன். ஒரு வழக்கறிஞராக, நீதிமன்றத்தில் பிறரின் உரிமைகளுக்காக வாதாடிய சமயத்திலும்கூட, நான் வெள்ளையர்களில் ஒருத்தி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதியின் அறைக்குள் நுழைகிற உரிமை எனக்குத் தரப்படவில்லை. ஆனால் அந்த வலிகளெல்லாம்தான் எனக்கு வலிமை தந்தது” என்று தன் கடந்த காலஅனுபவங்கைள கசப்போடு பகிர்ந்து கொண்டுள்ளார் நவநீதம் பிள்ளை.
1992 இல் தன்னுடன் வேலை பார்த்த சக வழக் கறிஞர்கள் இருவர் துணையுடன் இக்வாலிட்டி நவ் (Equality Now) என்ற பெண்களுக்கான மனித உரிமை அமைப்பை தோற்றுவித்து பெண்களின் நலனுக்காகவும் போராடி வருகிற இவர், கறுப்பு இன மக்களின் மனதில் உயர்ந்து நிற்கிறார்.
றுவாண்டா இனப்படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது ‘பாலியல் வன்புணர்வு போரில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட ஆயுதம்’ என்றும் அது ஒரு இனப்படுகொலைக் குற்றமே என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு அறிவித்தவர் நவநீதம் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.
நவநீதம் பிள்ளையின் நியமனத்தை சர்வதேச தலைவர்களும் அமைப்புகளும் பாராட்டி உள்ளனர்.
‘இந்த சாதனைக்குப் பின்னால் நிச்சயம் என் கணவர் பரஞ்ஜோதியின் பங்கு இருக்கிறது. அவரும் வழக் கறிஞர்தான். நிறவெறிக்கு எதிராக அவர் வாதாடியாதால் ஐந்து மாதங்கள் சிறையில் தள்ளப்பட்டார். இப்போது அவர் உயிருடன் இல்லை என்றாலும் என் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்’ என்று உணர்வு பூர்வமாக தன் கணவரை நினைவு கூர்கிறார் நவநீதம் பிள்ளை.
‘ஒரு காலத்தில் வெள்ளையர்கள் எங்களை ‘பிளாக் பியூட்டி’ என்று அழைத்தனர். ஆனால் குதிரைகளைத்தான் அப்படி அழைப்பார்கள் என்று தெரிய வந்தபோது அந்த வார்த்தையையே நான் வெறுத்தேன்.
அப்படி அவர்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கும் நிறவெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் என நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை.
இப்போது உள்ள குழந்தைகளுக்கு நிறவெறி என்றால் என்ன என்று கூட தெரியவில்லை. அதுதான் எங்களின் வெற்றி..’ என்று பெருமிதத்துடன் தெரிவித்தார் இந்த நீதிபதி.
இவருடைய நியமனம் தொடர்பாக இலங்கை அரசு இன்னமும் எக்கருத்தினையும் வெளியிடவில்லை. இலங்கைக்கு யூலை 25ல் விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ளனர்.
மேலும் லூயிஸ் அர்பரின் அழுத்தத்தினாலும் பிரித்தானிய அரசின் முன்னெடுப்பியாலும் ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்டது தெரிந்ததே.
மனித உரிமை மீறல்களை மேற்கொள்ளும் நாடுகள் தொடர்பாக நவநீதம் பிள்ளை எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
குறிப்பாக உலக வல்லரசான அமெரிக்கா, தனது தாயகமான தெக்காபிரிக்கா, பூர்வீக நாடான இந்தியா, தமிழ் பேசும் மக்கள் மீது மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இலங்கை போன்ற நாடுகள் தொடர்பாக நவநீதம் பிள்ளை எவ்வாறான போக்குகளைக் கடைப்பிடிப்பார் என்பது ஊன்றி அவதானிக்கப்படும்.
மனித உரிமைகள் பற்றி சர்வதேசம் எவ்வளவு தான் கதைத்த போதும் ஐக்கிய நாடுகள் சபையோ நவநீதம் பிள்ளை போன்றவர்களா அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளின் அழுத்தத்தை மீறி செயற்பட முடியாத யதார்த்தத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment