Tuesday, 22 July 2008

சார்க் அமைப்பில் தமிழீழமும் ஒரு அங்கம் என்பதை விளக்கும் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு: சு.ரவி


சார்க் அமைப்பில் தமிழீழ தேசமும் ஒரு அங்கத்துவ நாடு என்பதை வெளிப்படுத்தும் முகமாகவே அந்த மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "நினைவழியா பெரு மனிதன்" நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சார்க் மாநாட்டை சாட்டாக வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசு ஒரு காயை நகர்த்தியது.

அது யாதெனில், "இந்தியத் தலைவருக்கு சிறிலங்காவில் பாதுகாப்பளிக்க முடியாது. புலிகளால் இந்தியத் தலைவருக்கு உயிர் ஆபத்து உள்ளது. ஆகவே, அவரின் பாதுகாப்பிற்கு இந்தியப்படையை அனுப்புங்கள்" - என்று பொய்யான தகவலை சிறிலங்கா அரசு இந்தியாவுக்குத் தெரிவித்தது. இதனை தென்னாசிய நாடுகளும் நம்பியிருக்கலாம்.

விடுதலைப் புலிகளையும் இந்திய அரசையும் சிண்டுமுடிந்துவிடும் வேலையில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில், எமது விடுதலை இயக்கம் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவித்தலை வெளியிட்டு, சார்க் மாநாட்டுக்கான தனது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளது.

எமது விடுதலைப் போராட்டம் எமது மக்களுக்கானதே. அது தென்னாசியப் பிராந்திய நாடுகள் உட்பட எந்த நாட்டுக்கும் எதிரானதல்ல என்பதை எமது தேசியத் தலைவர் அவர்கள் கடந்த மாவீரர் நாள் உரையில் தெளிவாக விளக்கியுள்ளார்.

ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சார்க் அமைப்பில் இருக்கின்ற ஆறு நிலையான நாடுகளுடன் அதில் எமது தேசத்தையும் ஒரு அங்கமாக கருதுவதால்தான் சார்க் அமைப்புக்கான தமது ஆதரவை விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதுடன் சிங்கள அரசின் பொய்யான பரப்புரைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்றார் அவர்.

"நினைவழியா பெருமனிதன்" நூல் வெளியீட்டு நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடரினை வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி ஏற்றினார்.

தமிழீழத் தேசியக் கொடியினை கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் ஏற்றினார்.

"நினைவழியா பெருமனிதன்" அப்புஜீயின் படத்திற்கு கதிரவேலு, குருகுலம் நிர்வாகி கிரிஜா ஆகியோர் சுடரேற்றி மலர் மாலைகளைச் சூட்டினர்.

வரவேற்புரையினை ஆசிரியை சுதமஞ்சலி பாலேந்திரராசா, தலைமையுரையினை பசுபதிப்பிள்ளை ஆகியோர் நிகழ்த்தினர்.

வாழ்த்துரைகளை மகாதேவ ஆச்சிரம கணேசானந்த சுவாமிகள், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா ஆகியோர் வழங்கினர்.

வெளியீட்டு உரையினை கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் சி.சிறீதரனும் நினைவுரையினை பரமு மூர்த்தியும் நிகழ்த்தினர்.

"நினைவழியா பெருமனிதன்" நூலினை கிளிநொச்சி அரச அதிபர் நா.வேதநாயகன் வெளியிட்டுவைக்க, குருகுல சிறுவர் இல்ல நிர்வாகி கிரிஜா பெற்றுக்கொண்டார்.

சிறப்புப் படிகளை இராசரட்ணம் வழங்கினார்.

ஏற்புரையினை கிளிநொச்சி அரச செயல் திட்ட முகாமைத்துவ நிபுணர் அ.கேதீஸ்வரன் நிகழ்த்தினார்.

வே.கதிரவேலு கிளிநொச்சி மக்களினால் "அப்புஜி" என அன்பாக அழைக்கப்படுபவர். இவர் சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டவர்.

"குருகுலம்" சிறுவர் இல்லத்தைத் தொடக்கியதுடன் கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெறவிருந்த சிங்களக் குடியேற்றத் தடுத்து நிறுத்துவதிலும் முன்நின்று செயற்பட்டவர்.

காந்தியின் கொள்கையில் ஈடுபாடு கொண்டு தனது பெயரை "அப்புஜி" என மாற்றிக் கொண்டார்.

இந்தியப்படையால் இவர் யாழ். நகரில் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

ttpian said...

it is true tamileelam is one of the parts of it:who knows there will be a divide in SAARCH soon!
Tamileelam will sit along with Nepal and..............