இலங்கையில் நடைபெறவிருக்கின்ற 15 ஆவது சார்க் மாநாட்டின் பாதுகாப்பிற்காக இந்திய படையினர் 3000 பேர் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவருகின்ற செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா, மாநாட்டின் மூலமாக கிடைக்கின்ற நன்மைகள் தொடர்பில் பேசவிரும்பாதவர்கள் மாநாட்டிற்கான செலவுகள் குறித்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இது கிணற்றில் இருக்கின்ற தவளையின் கதையாகும் என்பதுடன் இந்திய படையினர் தொடர்பில் எனக்கு தெரியாது, நான் கதைப்பதற்கு விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போது செய்தியாளர் கேட்டகேள்விக்கே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் தொடர்ந்து பதிலளிக்கையில் மாநாடுகளின் மூலமாக கிடைக்கவிருக்கின்ற நன்மைகள் தொடர்பில் பேசவிரும்பாதவர்களே மாநாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றன. 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற அணிசேரா மாநாட்டின் மூலமாக கிடைத்த நன்மைகளை அனுபவிக்கின்றனர் மாநாட்டிற்கான செலவுகள் குறித்து பேசுவது கிணற்றில் இருக்கின்ற தவளையின் கதையாகும்.
சார்க் வலய நாடுகளிடமிருந்து கிடைக்கின்ற நன்மைகள் அதிகமானதாகும். இவ்வாறான தொரு நிலையில் இந்திய படையினர் தொடர்பில் நான் கதைப்பதற்கு விரும்பவில்லை எனக்குத் தெரியாது. அமைச்சர்களுக்கே கிடைக்காத செய்திகள் பல எப்படி ஊடகங்களுக்கும் மற்றவர்களுக்கும் கிடைக்கின்றன என்பது தமக்கு ஆச்சரியமாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment