Friday, 4 July 2008

சுயவிருப்பத்துடன் இலங்கை திரும்பினேன்: கருணா

முறைகேடுகள் இல்லாமலும், தனது விருப்பின் பேரிலும்தான் பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்குத் திரும்பியதாகத் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தனது மக்களுக்குத் தான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு தான் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என்று தான் விரும்பவில்லை என்றும் பிள்ளையான் அப்பதவியில் இருப்பதைத் தான் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

வடக்கில் நடந்துவரும் மோதல்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எதுவித சம்பந்தமும் கிடையாது; இராணுவத்துக்குத் தமது அமைப்பினர் உதவுவார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழோசைக்குப் பிரத்தியேகமாகச் செவ்வியொன்றை வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில் அவசரமாகத் தேர்தல் நடத்தப்பட்டதன் காரணத்தினால் தமது அமைப்புக்கு மேலும் கிடைத்திருக்க வேண்டிய ஆசனங்கள் கிடைக்காமல் போனதாகக் கூறினார்.

இருந்தபோதிலும் தமது அமைப்பு இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றது குறித்தும், தனது கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்தும் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கருத்து

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்சித் தலைவராகக் கருணா நீடிப்பார் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

கருணா அவர்கள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வருகையைத் தெரிவித்ததாகவும், தனக்கு வேலைப்பளு அதிகமாக இருப்பதால் பின்னர் சந்திப்பதாகக் கருணாவிடம் தெரிவித்துள்ளதாகவும் முதல்வர் கூறினார்.

No comments: