Wednesday, 9 July 2008

புலிகளின் அடுத்தகட்ட நகர்வு என்ன?: கொழும்பு ஊடகத்தின் எதிர்வுகூறல்

சிறிலங்காப் படையினரின் தற்போதைய பரவலான களமுனைகளை எதிர்த்து, தமிழீழ விடுதலைப் புலிகள் எதிர்வரும் வாரங்களில் எதிர்த்தாக்குதல்களை தீவிரப்படுத்தலாம் என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த பொட்டம்லைன்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் இருந்து தாக்குதல்களை தொடங்குவது என்ற திட்டத்தை படைத்தரப்பு கடந்த வருடம் தொடங்கியிருந்தது.

படையினரின் இந்த திட்டத்தின் முக்கிய இலக்குகளில் முல்லைத்தீவும் ஒன்று. முல்லைத்தீவு காடு இலங்கையில் உள்ள மிகவும் அடர்ந்த காடுகளில் ஒன்று.

படையினரின் இந்த திட்டங்களுக்கு அமைய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் நாள் இராணுவம் 59 ஆவது படையணியை உருவாக்கியிருந்தது.

மணலாற்றில் நிலைகொண்டுள்ள இந்த படையணியின் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் நந்தன உடுவத்த பணியாற்றி வருகின்றார். இவர் கவசப்படையின் பிரிகேட் தளபதியாக முன்னர் பணியாற்றியிருந்தார்.

இந்த படையணி மணலாற்று களமுனைகளில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. ஜொனி மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளின் ஆபத்துக்களால் படையணியின் நகர்வுகள் பெருமளவில் தடைப்பட்டு வருவதாக படையணியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

57 ஆவது படையணி 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் நாள் உருவாக்கப்பட்டிருந்தது. இது ஒரு தாக்குதல் படையணியாகும்.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இதன் கட்டளைத் தளபதியாக 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் நாள் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த படையணியின் நோக்கம் மடு, பாலம்பிட்டி, பெரியமடு அகிய பகுதிகளை கைப்பற்றுவதாகும்.

நடவடிக்கைப் படையணி - 01 என்ற படைப்பிரிவு, 58 ஆவது படையணியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கம் பெற்றது.

இந்த படையணியின் கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் சாகி கலகே பதவி வகித்த போதும், பின்னர் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் பிரிகேடியர் சவேன்ரா சில்வா இதன் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த படையணியின் நோக்கம் மன்னாரின் வடக்குப் பகுதியாகும்.

மேலும் மன்னாரின் நெல்விளையும் பகுதியையும் கைப்பற்றும் நோக்கத்தையும் இந்த படையணி கொண்டுள்ளது.

பரந்த வயல்வெளிகளை கொண்டுள்ள இந்த பகுதி மீதான படை நடவடிக்கைகளை படையினர் அதிகளவில் இரவு வேளைகளிலேயே மேற்கொண்டடிருந்தனர்.

விடத்தல்தீவை நோக்கி நகர்வதும் அவர்களின் பிரதான நோக்கம். விடத்தல்தீவு பரந்தவெளிகளை கொண்டிருப்பதனால் அதனை நோக்கி பகல் பொழுதில் நகர்வது கடினமானது. விடுதலைப் புலிகளின் எதிர்ப்புக்கள் அதிகமாக இருக்கும்.

நடவடிக்கைப் படையணி - 02 உருவாக்கம்

சிறிலங்காப் படையில் கடந்த மே மாதம் 14 ஆம் நாள் நடவடிக்கைப் படையணி - 02 எனும் படையணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் கட்டளைத் தளபதியாக கேணல் ரால்ஃப் நுகேரா நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் கவசத்தாக்குதல் படையணியின் கட்டளைத் தளபதியாக பணியாற்றிய இவர், 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் படுகாயமடைந்திருந்தார். முன்னர் ஒரு தடவை இவருக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மேலும் தற்போது இரண்டாவது அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது நடவடிக்கைப் படையணி - 02 க்கு பிரிகேடியர் பண்டார தற்காலிகமாக தலைமை தாங்கியிருந்தார்.

இந்த படையணி வவுனியாவுக்கு வடக்காக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

2007 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவம் தனது தாக்குதல் படையணிகளை அதிகரித்துள்ளது. முதலில் சிறிலங்கா இராணுவத்தில் நான்கு தாக்குதல் படையணிகள் மற்றும் பிரிகேட்டுக்கள் இருந்தன.

53 ஆவது படையணி, வான்நகர்வு பிரிகேட், கொமோண்டோ பிரிகேட், சிறப்பு படை பிரிகேட் என்பன இருந்தன.

இந்த படையணிகளின் உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. குடும்பிமலை மீதான நடவடிக்கைக்கு நடவடிக்கை படையணி - 01 உருவாக்கப்பட்டிருந்தது.

2008 ஆம் ஆண்டில் இராணுவம் பல தாக்குதல் படையணிகளை கொண்டதாக மாற்றம் பெற்றுள்ளது. 53, 55 ஆவது படையணிகளும், வான்நகர்வு பிரிகேட்டும் யாழ். குடாநாட்டில் நிலைகொண்டுள்ளன.

சிறப்புப் படையணி, கொமோண்டோ பிரிகேட், நடவடிக்கை படையணி - 02, 57, 58, 59 படையணிகள் மணலாறு, வவுனியா மன்னார் பகுதிகளில் நிலைகொண்டுள்ளன.

இந்தப் படையணிகளுக்கான உதவிகளை வான்படை வழங்கி வருகின்றது. எம்ஐ-24 தாக்குதல் உலங்குவானூர்தி தரைத்தாக்குதல் உதவிகளை வழங்குவதுடன், பெல்-212 மற்றும் எம்ஐ-17 உலங்குவானூர்திகள் காயமடைந்த படையினரை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த ஆறு மாதங்களில் படையினரின் 56 சடலங்களை விடுதலைப் புலிகள் ஒப்படைத்துள்ளனர்.

கொழும்பில் தாக்குதல் அச்சங்கள் நீங்கவில்லை. படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் போதும் விடுதலைப் புலிகள் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களிலேயே ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் அதிகளவான குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் 11 ஆம் நாள் மன்னாரின் எருக்கலம்பிட்டியில் உள்ள கடற்படையினரின் தளம் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 6 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் காயமடைந்தனர் என்று கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் சிறிலங்கா அரச தரப்போ 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்திருந்தது. இதன் போது விடுதலைப் புலிகள் ஆயுதங்களையும் கைப்பற்றியிருந்தனர்.

மே மாதம் 29 ஆம் நாள் சிறுத்தீவில் இருந்த கடற்படை நிலையையும் விடுதலைப் புலிகள் தாக்கியிருந்தனர்.

மே மாதம் 5 ஆம் நாள் எம்வி இன்வின்சிபிள் என்ற துருப்புகாவி கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் விடுதலைப் புலிகள் தகர்த்திருந்தனர்.

இந்த கப்பல் திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான வழங்கலில் ஈடுபட்டு வந்தது.

தற்போது ஐந்துக்கும் அதிகமான களமுனைகளில் மோதல்கள் நடைபெறுகின்றன.

எனவே இதன் எதிர்த்தாக்கம் என்ன என்பதே மில்லியன் டொலர் கேள்வி. இதற்கான விடைகள் எதிர்வரும் வாரங்களில் தெரியலாம்.

அதாவது, விடுதலைப் புலிகள் படையினர் மீதான எதிர்த்தாக்குதல்களை ஆரம்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: