தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபவர்கள்;மீது அரசாங்கம் கைவைத்தால் மேலும் பல தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்துத் தொடர்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி.லால்காந்த எச்சரிக்கை விடுத்தார்.
அரசாங்கத்துறை மற்றும் தனியார் துறையினரின் சம்பள உயர்வுதொடர்பான பிரேரணையொன்றை இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வருவதற்கு இந்தத் தொழிற்சங்கங்களே ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அவர்கள் மீது அரசாங்கம் கைவைத்தால் தொடர் தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அரசாங்கத் துறையினர் தற்பொழுது அடிப்படைச் சம்பளமாக 11,730 ரூபாவையும், தனியார் துறையினர் அடிப்படைச் சம்பளமாக 5 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்ட லால்காந்த, அவர்களின் சம்பளங்களை மேலும் 5 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்குமாறே தாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.
வடக்கில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் யுத்தம், நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டே தாம் 5 ஆயிரம் ரூபா சம்பள உயர்வைக் கோரியதாகவும்,
இந்தச் சம்பள உயர்வானது விலைவாசி அதிகரிப்புக்குப் போதுமானதாக இல்லையெனவும் லால்காந்த பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். சம்பளங்களை அதிகரித்தல் உட்பட 5 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தபோதும்
அதற்குப் பதில் கிடைக்காததால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாகவும், அதற்கும் சரியான பதில் கிடைக்காததாலேயே ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
நாளையதினம் நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் அரசாங்கப் பணியாளர்களின் பெயர்களை திரட்டுமாறு அரசாங்கம், அரசாங்கத் திணைக்கள அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளது எனச் சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர்,
அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், அவ்வாறு அவர்கள் மீது கைவைக்க அரசாங்கம் முயற்சித்தால் பாரிய விளைவை எதிர்நோக்கவேண்டி ஏற்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தத் தொழிற்சங்கப் போராட்டம் தோல்வியடையும் எனவும், இதனால் தாம் பயப்படவில்லையெனவும் கூறிவரும் அரசாங்கம், வேலைநிறுத்தம் குறித்து ஏன் அலட்டிக்கொள்கிறது என அவர் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.
இலங்கை போக்குவரத்துச் சங்கத்தின் பேரூந்துகள் நாளை சேவையில் ஈடுபடும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிய லால் காந்த,
நாளையதினம் போக்குவரத்துத் துறையினர் வேலையில் ஈடுபடமாட்டார்கள் எனவும், அவ்வாறு அவர்கள் வேலையில் ஈடுபட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்யத் தயார் எனவும் கூறினார்.
அத்துடன், அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் ஊழல்களை மறைக்கும் நோக்கிலேயே தொழிற்சங்கப் போராட்டத்தைத் தடுப்பதற்கு அரசாங்கம் மும்முரமாக முயற்சிப்பதாக ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க பாராளுமன்றத்தில் கூறினார்.
இதேவேளை, நாளையதினம் முன்னெடுக்கப்படவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், வடக்கில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் யுத்தத்துக்கு எதிராகவும் இருக்குமாயின் அதற்குத் தாம் ஆதரவு வழங்கப்போவதில்லையென விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment