Wednesday, 2 July 2008

போலி விஸாவுடன் வெளிநாடு செல்ல முயன்ற மூவருக்கு அபராதம்; ஒத்திவைக்கப்பட்ட சிறை

போலி விஸா மூலம் பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளுக்கு செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட இரு தமிழ் இளைஞர்களுக்கும், சிங்கள யுவதி ஒருவருக்கும் நீர்கொழும்பு நீதிமன்றம் தலா 50 ஆயிரம் ரூபா அபராதமும், 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருடகால சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

யாழ்ப்பாணம் உரும்பிராயைச்சேர்ந்த தர்மலிங்கம் செந்தூரன், புத்தளத்தைச் சேர்ந்த செல்லத்துரை ரகுநாதன் ஆகிய இருவரும் இத்தாலி செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பைச் சேர்ந்த துஷ்யந்தி ஜாகொட என்ற சிங்கள யுவதி பிரான்ஸ் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2007 டிசம்பர் 10 ஆம் திகதி இவர்கள் மூவரும் விமான மூலம் பயணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தபோது இவர்களின் பயண ஆவணங்களை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் பரிசீலித்தபோது போலியான விஸாக்கள் இருப்பது தெரியவந்ததையடுத்து குற்றப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

பொலிஸார் இவர்களை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சமர்ப்பித்த "பி' அறிக்கையைத்தொடர்ந்து மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு நீர்கொழும்பு நீதிவான் ஜனனி அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணை முடிவில் மூவரையும் குற்றவாளிகளாக கண்ட நீதிவான் மேற்படி தீர்ப்பை வழங்கினார். பயண முகவர் ஒருவர் மூலம் தமது வெளிநாட்டு பயணத்தை ஏற்பாடு செய்ததாக இவர்கள் தெரிவித்தனர்.

No comments: