Wednesday, 2 July 2008

இந்தியாவின் மினிப் படையெடுப்பு?

வ. திருநாவுக்கரசு

""அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கவில்லை. அவர்களைப் பயங்கரவாதத்தின் கோரப்பிடியிலிருந்து மீட்டெடுக்கும் நோக்கத்துடனேயே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பயங்கரவாதத்திற்குத் திடகாத்திரமாக முகம்கொடுத்து, கிழக்கை மீட்டது போல வடக்கையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. அங்கே வாழும் மக்கள் சாப்பிடுவதற்கு மட்டும் தான் வாய் திறக்க முடியும். அவர்கள் ஜனநாயக காற்றைச் சுவாசிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிப்பதற்காகவே ஆயுதப் படையினர் உழைத்துவருகின்றனர்' மேற்கண்டவாறு சென்றவாரம் இடம்பெற்றதாகிய பேருவலை மீன்பிடித் துறைமுகத்தின் திறப்பு விழாவின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதே பல்லவி தான் முன்னைய சந்திரிகா அரசாங்க காலத்திலும் இசைக்கப்பட்டு வந்தது. அதாவது, யுத்தமானது விடுதலைப்புலிகளுக்கெதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கெதிரானதல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஓயாது அலட்டி வந்தவர். அது போலவே, விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்து தமிழரை மீட்பதற்காகவே தாம் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த அடிக்கடி கூறிவந்தவர். தமிழ் மக்களை ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கி ஆண்டு வந்த பேரினவாத ஆட்சியாளர் தமிழரின் மீட்பர்களாக நாடகமாடி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் காரியமாகவே காணப்படுகிறது.

சிங்கள பேரினவாதத்தின் பிடியிலிருந்து தமிழரை மீட்கவே ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது

தமிழ் மக்களை சிங்கள பேரினவாதத்தினதும், அரச பயங்கரவாதத்தினதும் பிடியிலிருந்து மீட்பதற்கான தற்காப்புச் செயற்பாடாகவே தமிழரின் 3 தசாப்த கால சாத்வீகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமிக்க வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த வரலாறு ஆட்சியாளராக கம்பளத்தின் கீழ் தள்ளப்பட்டு, விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்ற காலத்திலிருந்துதான் ஆட்சியாளர் புதிய வரலாறு படைத்து வருகின்றனர். இது உண்மையில் ஆட்சியாளரை ஆட்டிப்படைக்கும் பேரினவாதப் போக்கின் குருட்டுத்தனத்தையும் அரசியல் மறதிக் குழப்பத்தை பிரதிபலிக்கிறது எனலாம்.

புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் பேசத் தயார்

அண்மையில் சர்வமதத் தலைவர்களுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ அலரி மாளிகையில் நடத்திய கலந்துரையாடலின் போது, விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்தால் உடனடியாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராயிருப்பதாகக் கூறிவைத்தார். தமிழர்தரப்பில் பல்வேறு தமிழ் இளைஞர் அமைப்புகளால் ஏன் ஆயுதப் போராட்டம் முடுக்கிவிடப்பட்டது என்பது எந்தவொரு அரிவரி அரசியல் மாணவனுக்கும் கூட தெரிந்த விடயமாகும். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு அரசியல் தீர்வு எட்டப்பட்டால் ஒழிய, இராணுவ அடக்குமுறை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டால் ஒழிய விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவார்களென எதிர்பார்ப்பது யதார்த்தத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும். ஆயுதப் போராட்டமும் யுத்தமும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களால் தமிழர் மீது திணிக்கப்பட்டன எனும் ஒட்டுமொத்தமான வரலாற்று யதார்த்தத்தினை நாடு இன்று ஆளாக்கப்பட்டிருக்கும் நிலையிலாவது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உணர்ந்து கொள்ளுமாயின் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட இடமுண்டு. ஆனால், விடுதலைப்புலிகளைக் கொன்று குவித்துப் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்ட வேண்டுமென்ற நிகழ்ச்சித் திட்டத்தினை படைத்தரப்பினர் தன்னிச்சையாக முன்னெடுப்பதற்கான "வெற்றுக் காசோலை' அங்கீகாரத்தை அரசாங்கம் வழங்கியுள்ளமையே காண முடிகிறது. அந்த வகையில் இன்னும் ஒரு வருட காலத்தில் விடுதலைப்புலிகளை முற்று முழுதாக ஒழித்துக்கட்டப் போவதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாட்டு ஊடகவியலாளர் முன்னிலையில் கூறியுள்ளார். விரைவில் ஓய்வுபெற்றுச் செல்லவுள்ள இராணுவத் தளபதி, இன்றைய யுத்தத்தினை அடுத்த தளபதிக்கு விட்டுச் செல்லப் போவதில்லையென முன்னர் சூளுரைத்ததற்கு அமைய திட்டம் தீட்டியுள்ளதாகவே பகிரங்கமாக அறிவித்துள்ளார் போலும். ""விடுதலைப்புலிகள் மரபு ரீதியிலான யுத்தத்தில் ஈடுபடும் ஆற்றலை இழந்துவிட்டனர்' என பொன்சேகா கூறியதோடு, ""இடங்களைப் பிடிப்பதற்கு மட்டும் நாம் செல்லவில்லை. நாம் கொல்லவும் போகிறோம்' என முழங்கியுள்ளார். 2006 இற்குப் பின்னர் ஏறத்தாழ 9000 புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஆனால், அந்தக் காலப்பகுதியில் புலிகள் மேலும் அதிகமானோரை திரட்டியிருப்பதாகவும் கூறியுள்ள பொன்சேகா, அதேநேரம் அவர்களின் தற்போதைய எண்ணிக்கை 5000 எனவும் முன்னர் புலிகளின் பலத்தைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாகவும் ஒப்புக்கொண்டார். இடங்களைப் பிடிக்கும் விடயத்திலும், குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் ஆண்டாங்குளம், பரப்புக்கடந்தான், ""றைஸ் பொவ்ல்' (கீடிஞிஞு ஆணிதீடூ) என்றழைக்கப்படும் பாரம்பரிய நெல்விளையும் பிராந்தியம் போன்ற இடங்களும் மன்னார் கடற்கரைப் பிரதேசம் முழுவதும் கைப்பற்றப்பட்டுவிட்டதாகவும் விடத்தல் தீவை அண்மித்துக் கொண்டிருப்பதாகவும் ஜெனரல் பொன்சேகா கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எதுவாயினும், படைத்தரப்பினரின் பிரசார யுத்தமும் வெகு தீவிரமாக நடத்தி வரப்படுவதைக் காணமுடிகிறது.

வாழ்க்கைச் செலவு விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கையில் தென்னிலங்கை மக்கள் வயிற்றுப் பட்டிகளை இறுகக்கட்டி வைத்திருந்தது போதும் எனப் பொறுமையிழந்து குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தினர். போராட்டங்களில் குதிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், யானைப் பசிக்குச் சோளப் பொரி போல், ரூ. 5000 சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ள தறுவாயில் ரூ. 1000 வழங்குவதன் மூலமும் வடக்கு யுத்தத்தில் வெற்றிக்கு மேல் வெற்றியீட்டப்படுகின்றன என பிரசாரம் செய்வதன் மூலமும் மக்களை அமைதிப்படுத்திவிடலாமென அரசாங்கம் எண்ணுகின்றது போல் தெரிகிறது. படைத்தரப்பினரின் பிரசாரத்தின் மீது அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. ஏனென்றால், பிரசார யுத்தமும் ஒரு போர்த் தந்திரோபாயமென அவர்கள் எண்ணுவர். ஆனால், படைத்தரப்பினர் விடுதலைப்புலிகளையோ, விடுதலைப் புலிகள் படைத்தரப்பினரையோ குறைத்து மதிப்பிடப் பிரயத்தனம் செய்வது நல்லதற்கல்ல. வெற்றிகளும் தோல்விகளும் மாறி மாறி வந்து கொண்டிருக்கக் கூடும். எனவே, இருதரப்புமே பெருவெற்றிகளை ஈட்டுவதற்கான வியூகத்தை வகுத்துக் கொண்டிருக்கும் நிலைதான் எஞ்சிநிற்கும். ஆக, யுத்தம் ஓரிரு வருடங்களில் முடிவுக்கு வந்து விடும் என்பதற்கு மாறாக யுத்தம் தொடர்ந்து நடைபெற்று நாட்டைச் சிதைத்துச்சீரழித்துக் கொண்டே போகும்.

நாட்டின் இறைமையிலும் ஆட்புல ஒருமைப்பாட்டிலும் ஆட்சியாளருக்கு உண்மையான அக்கறை இருக்குமாயின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்த முள்ள அதிகாரப்பகிர்வு மூலமான அரசியல்தீர்வு காணப்படவேண்டும். அல்லாவிட்டால் நாடு பல்வேறு வெளிநாட்டு சக்திகளால் சுரண்டப்படும் ஆடுகளமாகி விடும். வளங்கள் சூறையாடப்படும் நிலை அதிகரித்துச் செல்லும். 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் "இந்தியா திருகோணமலை எண்ணெய்க்குதங்களைப் பெற்றுக் கொண்டதும் தமிழருக்குக் கிடைத்தது ஒன்றுமில்லை' என 2 வாரங்களுக்கு முன் இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர் அதிகாரிகள் முன்னிலையில் கடிந்தார் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், சம்பூரில் அனல் மின்நிலையம் நிறுவுவதற்கு பல்லாயிரக்கணக்காண ஏக்கர் நிலங்கள் இந்திய அரசுக்கு வழங்கப்படவுள்ளன. அப்பகுதியில் தலைமுறை தலைமுறைமுறையாய் வாழ்ந்து வந்த பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய விவசாய மற்றும் மீனவ மக்கள் விரட்டப்பட்டுவிட்டனர்.

இதனிடையில் அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம் மற்றும் மன்னார் எண்ணெய் அகழ்வுத்திட்டங்கள் மூலம் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கு சில அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடிய அச்சம் காணப்படுகிறது. சீனா இலங்கைக்கு குறிப்பிடத்தக்களவு ஆயுத விநியோகங்களும் செய்துள்ளது. இலங்கை தனது அண்டை நாடென்ற வகையில் சீனா மற்றும் பாகிஸ்தானின் செல்வாக்கை இலங்கையில் மேலோங்க விடாமல் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கு இந்தியா முனைந்து கொண்டிருக்கும். எதிர்வரும் சார்க் (குஅஅகீஇ) மாநாடு தொடர்பாக வருகைதரவுள்ள இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங்கின் பாதுகாப்புக் கருதி இலங்கையில் 3000 பேர் கொண்ட படைபலம் இறக்கப்படவுள்ளது. இந்த "மினி' படையெடுப்பு இலங்கையில் இறைமைக்குப் பங்கம் விளைவிக்கும் என தேசியவாதிகள் கூக்குரலிடுவார்கள். இவ்வாறான ஆக்கிரமிப்புகளுக்கு அடிப்படையில் அதிதீவிர தேசிய வாதிகளும் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு வேண்டுமென கங்கணம் கட்டி நிற்கும் பேரினவாதிகளும்தான் காரணம் ஒழிய வேறு யாரும் அல்ல. 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு அன்றைய இந்தியப்பிரதமர் ரஜிவ் காந்தி, மரியாதை அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த கடற்படைச் சிப்பாய் ஒருவரால் துப்பாக்கியால் பலமாகத்தாக்கப்பட்டார். கடுமையான சூரியக்கதிர் வீச்சு காரணமாக பாதிப்பு ஏற்பட்டதாலேயே அந்தச்சிப்பாய் இந்தியப் பிரதமரை தாக்கிவிட்டார்போலும் என அன்றைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.கேலியாகக் கூறிச்சமாளித்துவிட்டார்.

மன்மோகன்சிங்கின் பாதுகாப்புக்காகவென காரணம் கற்பித்தும் தான் பெரிய படைபலம் இங்கே இறக்கப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அதிகம் அழுத்தம் கொடுப்பதற்கு அக்கறை காட்டாமல் இந்தியா சற்று நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. அன்று 1987 இல் இலங்கையில் இந்திய அமைதிப்படையினை இறக்கி விரலைச் சுட்டுக் கொண்டதன் பின் "கைவைப்பதில்லை' எனும் போக்கினைக்கடைபிடித்து வந்துள்ளது. அதே நேரத்தில் இராஜதந்திர முறையில் "இலங்கையில் எல்லா இனங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுக்கு இந்தியா ஆதரவளிக்கும்' என இந்திய அரசாங்கங்கள் வாய்ப்பாடாகக் கூறிவந்துள்ளன. அண்மையில் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் காலம் கடந்த 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாகத் தெரிவித்த போது "அது ஒரு நல்ல ஆரம்பம்' என இந்தியா அரசாங்க தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அது ஒருகண்துடைப்பு என்பதை இந்திய ஆட்சியாளர் புரிந்து கொண்டால், அது தொடர்பாக மன்மோகன்சிங் எதிர்வரும் மாநாட்டு உரையில் எத்தகைய நிலைப்பாட்டினை முன்வைக்கப் போகின்றார்? இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தும் ஏறத்தாழ 100,000 இலங்கை அகதிகள் பற்றி என்ன கூறப்போகின்றார்.

No comments: