இந்திய-அமெரிக்க அணுஉற்பத்தி உடன்படிக்கையானது, இந்தியாவில் பெரும் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ள அதேநேரம், அது இலங்கையின் இனப்பிரச்சினையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையும் நாம் இலகுவாக எடுத்துக்கொள்ளமுடியாது.
விரைவில் பதவி விலகவிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நிக்கலஸ் பேர்ண்ஸ், இந்த இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தமானது இலங்கையின் இனப்பிரச்சினையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றித் தெளிவான ஒரு குறிப்புக் கொடுத்துள்ளார்.
தமது இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன் இந்தியாவிற்கு 2008 இன் ஆரம்பத்தில் நிக்கலஸ் பேர்ண்ஸ் சென்றிருந்தபோது, ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் ஒரு தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தியா இந்த உடன்படிக்கை குறித்த ஒரு தீர்மானத்தை எடுக்காவிட்டால், அமெரிக்காவிடமிருந்து இனிமேல் சிறந்த ஒரு உடன்படிக்கையை இந்தியா எடுக்கமுடியாது என அவர் இந்தியாவிற்கு எச்சரித்திருந்தார்.
தெற்காசியாவுடனான ஒரு 'பங்காளி' என்ற வகையில், இது ஒரு 'சிறந்த உடன்படிக்கை' என பேர்ண்ஸ் ஒருதடவை இதை இனங்கண்டார்.
பெப்ரவரி 2008இல், வொஷிங்டனின் பத்திரிகையாளர் மாநாட்டின் போது, இந்த இந்திய-அமெரிக்க அணுஉற்பத்தி உடன்படிக்கை பற்றிக் குறிப்பிட்ட நிக்கலஸ் பேர்ண்ஸ், இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் எல்லாத் தீர்மானங்களும் எடுக்கப்படும்போது, அமெரிக்கா, இந்தியாவின் பக்கமே நிற்கும் என்றார்.
"நாம் (இந்தியாவும், அமெரிக்காவும்) தெற்காசியாவின் பங்காளிகளாகியுள்ளோம். நாம் இந்தியாவுடன் மிகவும் நெருங்கிப் பணிபுரிகிறோம். உதாரணமாக, நேபாளில் அமைதியான ஒரு பதவிமாற்றத்திற்கு முயல்கிறோம், இலங்கையைப் பொறுத்தவரையில் நாம் இந்தியாவுடன் மிகவும் நெருங்கிப்பணிபுரிகிறோம்.....".
மேற்கூறிய பேர்ண்ஸின் கூற்றின்படி, இந்திய-அமெரிக்க அணு உற்பத்தி உடன்படிக்கையில் இந்தியா ஒரு தீர்மானத்தை எடுக்காதபட்சத்தில், இலங்கையின் இனப்பிரச்சினைபற்றிய இந்திய-அமெரிக்கப் பங்காண்மை எடுக்கும் தீர்மானங்களும் எதிர்பார்க்கும்படியாக அமையாது.
இந்த 'பங்காண்மை' மூலம், தெற்காசிய நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கை விடயங்களில் இந்தியா எடுக்கும் முடிவுகள் எல்லாம், அமெரிக்காவின் கொள்கைத் தீர்மானங்களாகவே மாறும். இந்நாடுகளின் மீதான இந்தியாவின் 'வல்லாட்சி' யை, அமெரிக்கா கண்டுகொள்ளாது.
இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987இல் கைச்சாத்திடப்பட்டபோது, இந்த வகையான நடத்தையையே அமெரிக்கா வெளிப்படுத்தியிருந்தது.
1987ல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட முன்பு இந்தியா, இலங்கையின் வான் எல்லையை ஆக்கிரமித்தபோது, அமெரிக்க ஆதரவாளரான அப்போதைய ஜனாதிபதியான ஜே.ஆர், அதனிடம் உதவிகேட்டார். அதனை அமெரிக்கா மறுத்தது மட்டுமல்லாமல், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்குமாறும் இந்தியாவுடனான பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கவேண்டாமெனவும் ஜே.ஆருக்குப் புத்திமதி கூறியது.
இந்தப் பதிலை ஜே.ஆர் அமெரிக்காவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடவென ராஜீவ் காந்தி இலங்கை வந்தபோது, அவரை கௌரவிப்பதற்கென ஒரு வரவேற்பை ஜே.ஆர் ஒழுங்கு செய்தார். அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜேம்ஸ் ஸ்பெயினையும் வரவழைத்திருந்தார். அமெரிக்கத்தூதர், அப்போதைய ஜனாதிபதி றேகனிடமிருந்து ஒரு செய்தியையும் கொண்டுவந்திருந்தார். அச்செய்தியை, இலங்கை-இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு முன்னர் ராஜீவ் காந்திக்குக் கையளிக்க றேகன் விரும்பினார்.
இந்தச் செய்தியுடன் ஜே.ஆரும், ராஜீவும் தேனீர் அருந்திக்கொண்டிருந்த மேசையருகே வந்த அமெரிக்கத்தூதர், அதை ராஜீவிடம் கையளித்தார். அது ஒரு தொலை நகல் செய்தியாகும். அதில், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அமெரிக்கா ஆதரிக்கிறது என்றிருந்தது.
இது, இலங்கை மீதான இந்தியாவின் இந்தத் தலைமைத்துவ நடத்தையை அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்பதற்கான அறிகுறியாகும். இலங்கை-இந்திய உடன்படிக்கையில், திருகோணமலையில் அமெரிக்க எண்ணைத்தாங்கிகளையும், 'அமெரிக்காவின் குரல்' (Voice of America) வானொலியையும் அமைக்கும் அமெரிக்காவின் திட்டம் பற்றிய சில வரையறைகளை இந்தியா மேற்கொள்ளும்போதுதான் அமெரிக்கா இந்த ஆதரவை வழங்கியிருக்கிறது.
இலங்கை-இந்திய உடன்படிக்கை கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தி இலங்கையில் தங்கியிருந்தபோது, ஜே.ஆர் அமெரிக்கத்தூதரைச் சந்தித்தார். அச்சந்திப்பில், ஜே.ஆர் உலங்குவானூர்திகளுக்குரிய உதிரிப்பாகங்களைக் கேட்டார். அதற்கு, இந்தியாவின் சம்மதத்தைக்கேட்குமாறு அமெரிக்கத்தூதர் கூறியமை ஜே.ஆருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. பின்னர், ஜே.ஆர், ராஜீவைச் சந்தித்துத் தாம் உலங்குவானூர்திகளுக்கான உதிரிப்பாகங்களை அமெரிக்காவிடம் கேட்டிருந்ததாகச் சொன்னார்.
தெற்கிலுள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அவைகள் பயன்படும் என ஜே.ஆர் சொன்னபோது, ராஜீவ் மறுக்கவில்லை. ஆனால், இலங்கை பிற நாடுகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும்போது, அவைகள் இந்தியாவால் பரிசோதனை செய்யப்படும் என ராஜீவ் சொன்னார்.
இது, அமெரிக்கா இந்தியாவுடன் ஏதாவதொரு நடவடிக்கையில் ஈடுபடும்போது, இலங்கைப் பிரச்சினையை ஒரு பேரம்பேசும் மையமாக அது பாவிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
நிக்கலஸ் பேர்ண்ஸின் கூற்றை மேலும் பார்க்கும்போது, இதே நிலையையே அமெரிக்கா நேபாளத்தின் விடயத்திலும் கடைப்பிடிப்பது தெரிகிறது.
அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றி அவர் தனது கொள்கை விதிகளில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"இலங்கையில் சிறுபான்மைத் தமிழருடன் இணைந்து, அதிகாரப்பங்கீடு உடன்படிக்கை மூலம் ஒரு அரசியல் தீர்வை உருவாக்குவதிலும் இத்தீவின் பிரச்சினையை முடிவுக்குக்கொண்டுவருவதிலும் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்று சேர்ந்துள்ளன. கடந்த வருடத்தில் இலங்கையில் பரவிய பயங்கரவாதத்தையும் மனித உரிமை மீறல்களையும் எதிர்ப்பதில் எமது நாடுகள் இணைந்து நின்றன......"
"இந்தியா இப்பிராந்தியத்தின் பெரிய நாடாகவும் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் பலங்கொண்டதாகவும் இருப்பதால், முதன்முறையாக நாம், தெற்காசியாவின் நீண்டகால அமைதிக்காகவும் பிரச்சினைகளை மட்டுப்படுத்துவதற்காகவும் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து பணிபுரிந்து வருகிறோம். உலகின் வன்முறையான மற்றும் நிரந்தரமான தன்மையற்ற பிராந்தியத்தில், இந்தியா ஒரு ஸ்திரமான சக்தியாகவிருப்பதை நாம் பார்க்கிறோம். ......."
இந்தியாவுடனான அமெரிக்காவின் நன்மைதரக்கூடிய சந்தர்ப்பமாக இதை பேர்ண்ஸ் இனங்காண்கிறார்.
இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியானது, இந்திய- அமெரிக்க அணு உற்பத்தி உடன்படிக்கையை மேற்கொள்ளத் தவறின், இந்த நன்மைதரக்கூடிய சந்தர்ப்பத்திற்கு என்ன நடக்குமென்பதை ஒருவராலும் எதிர்வுகூற முடியாது.
இந்தியவின் காங்கிரஸ் ஆட்சியுடன் கூட்டுச்சேர்ந்திருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது இந்த உடன்படிக்கைக்கு எதிராகவிருப்பதால் இந்திய அரசாங்கம் ஒரு பெரும் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.
இப்போது, இப்பிரச்சினையை, தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்குச் சாதகமாக்க முயன்றுவருகின்றனர். ஏனெனில், விடுதலைப்புலிகளை அமெரிக்கா தடைசெய்வது பற்றிய விடயத்திலும் அவர்கள் பற்றிய அமெரிக்காவின் கொள்கைகளை மாற்றுவதற்கும் இந்தியா பெரும் தடையாகவிருந்துள்ளது. இந்திய-அமெரிக்க பங்காண்மையின்படி@ இந்தியாவுடன் கலந்தாலோசித்த பின்னரே இலங்கை இனப்பிரச்சினை பற்றியும் இப்பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகள் பற்றியும், அமெரிக்கா முடிவெடுக்கும்.
சர்வதேச அளவில் விடுதலைப்புலிகளுக்கு இது மிகவும் ஆபத்தான தடையாகவுள்ளது. அதனால், இந்திய-அமெரிக்க அணுஉற்பத்தி உடன்படிக்கை கவிழ்வதையும் அதன் பலனாக இந்திய- அமெரிக்கப் பங்காண்மைக்குப் பங்கமேற்படுவதையும் விடுதலைப்புலிகள் மிகவும் விரும்புவர் என்பதில் ஐயமில்லை.
(09.07.2008 ஆம் திகதி வெளிவந்த டெய்லி மிறர் பத்திரிகையில் உபுல் ஜோசப் பெர்னாண்டோ என்பவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்)
Saturday, 12 July 2008
இந்திய-அமெரிக்க அணுஉற்பத்தி உடன்படிக்கை இலங்கையின் இனமுரண்பாட்டில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment