Saturday, 12 July 2008

திஸ்ஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதா? விடுவிப்பதா? தீர்மானிக்க நீதிமன்றம்

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதா அல்லது அவரை விடுதலை செய்வதா என்பதை அறிவிக்க நீதிமன்றம் ஒரு மாதகாலம் அவகாசம் வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 127 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

திஸ்ஸநாயகம் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதா அல்லது அவரை விடுதலை செய்வதா என்பது பற்றி அடுத்த மாதம் 20ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டுமென நீதிபதிகளான ராஜா பெர்னான்டோ, அன்ரு சோமவன்ச மற்றும் பி.ஏ.ரட்நாயக்க அடங்கிய நீதிபதிகள் குழு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பெறுப்பதிகாரி பிரசன்ன அல்விஸே தான் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கு நேரடியாகப் பொறுப்புக் கூறவேண்டியவர் என திஸ்ஸநாயகம் தனது அடிப்படை மனித உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவசரகாலச் சட்டத்துக்கு அமைய நீண்டகாலம் தடுத்துவைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதிகாரங்களை வழங்கியிருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பெறுப்பதிகாரி பிரசன்ன.டி.அல்விஸ், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் நந்தன முனசிங்க, முன்னாள் பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் திஸ்ஸநாயகத்தின் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

திஸ்ஸநாயகத்தின் அடிப்படை மனித உரிமை மனுவை விசாரிப்பதற்கு நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. இனத்தை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் தன்னை முறையற்ற விதத்தில் நடத்தியதாகவும், இது தனது அடிப்படை மனித உரிமையை மீறியிருப்பதாகவும் ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தனது அடிப்படை மனித உரிமை மனுவில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் மற்றும் அவருடைன் கைதுசெய்யப்பட்ட அச்சக உரிமையாளர் ஜெசிகரன் அவருடைய மனைவி வளர்மதி ஆகியோர் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாத நிலையில் 127 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: