ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது விஜயத்தை முடித்துக்கொண்ட பின்னர் நேற்று கொழும்பில் ஊடக மாநாட்டை நடத்தினர்.இதன் போது கருத்துரைத்த அவர்கள்,
தமிழ் தேசியக்கூட்டமைப்பு பங்கேற்காமல் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அனைத்துக் கட்சி மாநாட்டின் நடவடிக்கைகள் எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை எனக் குறிப்பிட்டனர். திருகோணமலைக்கு சென்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானைச் சந்திக்கவிருந்த போதும் அதற்கான வாய்ப்புகள் கிடைக்காமை குறித்துத் தாம் வருத்தம் தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கைக்கான தமது விஜயத்தின் முக்கிய நோக்கமாக இருந்த இந்தச் சந்திப்பு, இலங்கையின் பாதுகாப்பு நிலவரங்களை கருத்திற்கொண்டு ரத்துச்செய்யப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்குத் தலைமை தாங்கி வந்திருந்த,தெற்காசிய உறவுகளுக்கான தலைவர் ரொபட் இவான்ஸ் இதன் போது கருத்துரைக்கையில், இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுகிறது என்பதை தாம் அறிந்துள்ளபோதும் இடம்பெறுகின்ற ஆட்கடத்தல்கள் என்பன இடம்பெற்று வருகின்றமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளையும் தாம் கண்டிப்பதாகக் குறிப்பி;ட்ட அவர்,இலங்கையில் இன்னும் சமாதானத்திற்கான வாய்ப்புகள் உள்ளதாக நம்பிக்கை வெளியிட்டார். கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளளமை குறித்துத் தாம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர்,
மாகாண நிர்வாகத்திற்குத் தலைமை வகிக்கும் முன்னாள் ஆயுதக்குழு ஆயுதங்களைக் களைய வேண்டும். சிறுவர்களைப் படைகளில் சேர்க்கும் நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உத்தியோகபூர்வ தகவல்களின்படி படையில் உள்ள 500 உறுப்பினர்கள் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அதில் 100 பேருக்கு எதிராக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனினும் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என இவான்ஸ் குறிப்பிட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் 12 பேர் இலங்கையில் கொல்லப்பட்டமையும், ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். |
No comments:
Post a Comment