Friday, 25 July 2008

தென்கிழக்கு ,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் சேர்ப்பு! சந்தேகத்தை ஏற்படுத்தும் செயல் - ஹசன் அலி

முஸ்லிம் தரப்புடன் அல்லது முஸ்லிம் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை செய்யாமல்

திடீரென தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை இணைப்பது எம்மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் மு.காங்கிரஸின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசன் அலி.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக சிங்கள மாணவர்களை அரசாங்கம் இணைத்துள்ளது. இது தொடர்பாக கருத்துக் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், இன ஒற்றுமை என்ற தோரணையில் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


நுரைச்சோலை திட்டம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு இம்முறை வைத்தியத்துறைக்கு முஸ்லிம் மாணவர்களை அனுமதித்தல் போன்றவற்றையும் அரசாங்கம் செய்து வருகிறது.


இதனைத் தட்டிக்கேட்க வேண்டியது அரசாங்கத்திற்கும் முஸ்லிம் அமைச்சர்களின் கடமையாகும்.

பெரும்பான்மை இனத்தினரிடையே மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அபிவிருத்திகளின் போது இந்த இன ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதில்லை.


மாறாக சிறுபான்மை மக்களிடையே அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளும்போது மாத்திரம் இன ஒற்றுமை தொடர்பாக அரசாங்கம் செயற்படுவது எம்மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த வழிமுறைகள் மாணவர்களிடையே இனமுரண்பாட்டை மேலும் வளர்ப்பதாகவே அமையும். இன்று நாட்டில் யுத்தம் நடைபெறுகிறது.


யுத்த சூழ்நிலையில் எவ்வாறான பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைப்பிடிக்கப்படாமல் தன்னிச்சையாக அரசாங்கம் செயற்படுவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, யுத்தத்தை முடித்துவிட்டு இன ஒற்றுமை தொடர்பான வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ளலாம் என்கிறார் மு.காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹசன் அலி.

No comments: