Monday, 7 July 2008

அரசாங்கம் - புலிகள் - ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ள நினைப்பது முட்டாள்தனமானது--முன்னாள் ஐஆர்ஏ போராளி

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுக்களின் ஊடாக மட்டுமே தீர்வு காணப்பட முடியும் என முன்னாள் ஐஆர்ஏ போராளியும், மூத்த தளபதியும், தற்போது அதிகாரப்பகிர்வு பெற்றுள்ள அரசின் பிரதி முதலமைச்சருமான மார்ட்டின் மைக்கைனீஸ் தெரிவித்துள்ளார்.

மார்ட்டின் மைக்கைனீஸ் தெரிவித்ததாக பிபிசி சேவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

போர் நிறுத்த காலத்தில் அரசும் விடுதலைப் புலிகளும் தாம் அதிக வெற்றிகளை பெற்று விட்டதாக நம்பலாம் ஆனால் அவ்வாறு அவர்கள் நம்பினால் அது அவர்களின் அறியாமை எனவே நான் கூறுவேன்.

அமைதி ஒப்பந்தம் வட அயர்லாந்தில் அமைதியை கொண்டு வந்தது, இது அங்கு நடைபெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. இந்தப் போரில் 3,000 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அதனை அடைவதற்கு 20 வருடங்கள் எடுத்தன.

எனினும் இந்தக் காலப்பகுதியில் புரட்டஸ்தாந்து மக்களினதும், கத்தோலிக்க மக்களினதும் பிரிவினைகள் அதிகரித்திருந்தன.

சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெறும் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டும். கருத்துள்ள பேச்சுக்களும் அமைதி உடன்பாடுகளுமே இனப்பிரச்சினைக்கான தீர்வை கொண்டுவரும்.

எனினும் இரு தரப்பும் படைத்துறை வெற்றிகளை எதிர்நோக்கி நிற்கின்றன. நீங்கள் படைத்துறை வெற்றிகளைப் பெற்றாலும் அது இறுதி தீர்வாகாது.

அவர்களின் பிரச்சினைகளை நாம் தீர்க்க முடியாது, அதனை அந்த மக்களே தீர்க்க வேண்டும். அமைதி பேச்சுக்களானாலும், மோதல் தவிர்ப்பு உடன்பாடுகளானாலும் அதற்கு முக்கியமானது தலைமைத்துவமே. தலைவர்களின் அர்ப்பணிப்பும், புரிந்துணர்வுகளுமே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரே வழி. இருதரப்பும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினை பேச்சுவார்த்தை மேசையில் தான் தீர்க்க முடியும். வேறு எந்த வழிகளாலும் தீர்க்க முடியாது என்றார் அவர்.

மார்ட்டின் உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து மோதல்களை தவிர்ப்பது தொடர்பாக கருத்துகரைகளில் ஈடுபட்டிருந்ததுடன், இலங்கைக்கும் பல தடவைகள் பயணம் செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

source:http://www.puthinam.com/full.php?2beLD6Aeb0ac4AmIo30ecdAYcm20cc3o0MtV24d345Vo6c4b33oOO4Y4d4eUOA4cad0e0We1fDde

No comments: