ஊடகவியலாளர்களுக்கான முதலாவது அச்சுறுத்தல் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்தே வருவதாக ஜே.வீ.பீயின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சன்டே லீடர் பத்திரிகையின் பாதுகாப்பு தகவல்களை எழுதும் ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் தன்னை சந்தித்த பின்னர், அந்த சந்திப்பு குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விசாரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தாஸ் விடுதலைப்புலிகளுக்கு உதவும் வகையிலான தகவல்களை வெளியிடாதவர். ஆச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் இக்பால் அத்தாஸ் ஜே.வீ.பீயின் அலுவலகத்திற்கு விஜயம் செய்து தன்னையும்,ஏனைய இரண்டு பேரிடனும் கலந்துரையாடி விட்டுச் சென்ற 5வது நிமிடத்தில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தொலைபேசி மூலம் தன்னுடன் தொடர்பு கொண்டு,
அத்தாஸை அழைத்து என்ன பேசுகிறீர்கள்
என கேட்டதாகவும் சோமவன்ஸ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமல்ல அவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவோருக்கும் பாதுகாப்பு அமைச்சினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை இதன் மூலம் அறியமுடிவதாக அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர்களை ஒடுக்க யுத்தம் பயன்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ள ஜே.வீ.பீயின் தலைவர் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை எழுதினால், அதனை பாதுகாப்பு அமைச்சு நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை யுத்தத்தின் போது, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என சர்வதேசத்திடம் கோருவதாக கூறிய சோமவன்ஸ ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல போவதாக தெரிவித்துள்ளார்.
யுத்தத்துடன் கோர்த்து ஊடகங்களை ஒடுக்க முயற்சிப்பதாகவும், அடையாள பணிப்புறக்கணிப்புக்கு உழைக்கும் வகுப்பினர் தயாராகி வரும் போது, கொழும்பில் படையினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த உள்ளனர் என பிரசாரத்தை முன்னெடுத்து வரும் இந்த அரசாங்கம் இவ்வளவு காலம் யுத்தம் செய்வதாக கூறி எதனை செய்தது எனவும் சோமவன்ஸ அமரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments:
Post a Comment