Friday, 4 July 2008

கருணா பிரித்தானியாவில் இருந்து திரும்புவதற்கும் இலங்கை அரசாங்கமே போலிக் கடவுச்சீட்டை வழங்கியதாகக் குற்றச்சாட்டு


கருணா நாடு திரும்புவதற்கு இலங்கை அரசாங்கமே அந்தனி என்ற பெயரில் மீண்டும் ஒரு முறை போலியான கடவுச்சீட்டை அவருக்கு வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்

ஏற்கனவே பிரித்தானியாவுக்குள் செல்வதற்குத் தமக்கு இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவே கடவுச்சீட்டைத் தயார்ப்படுத்திக் கொடுத்ததாகக் கருணா பிரித்தானிய நீதிமன்றத்தில் தெரிவித்திருந்ததையும் லக்ஸ்மன் கிரியெல்ல சுட்டிக் காட்டினார்.

எனினும் தமது பயண ஏற்பாடுகள் குறித்த தகவல்களை வெளியிட பி பி சி தமிழோசையுடனான செவ்வியின் போது கருணா மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய உயர் குழுவினர், இலங்கையில் வடக்குகிழக்கு இணைப்பை வலியுறுத்தியதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்தியா, இனப்பிரச்சினைத் தீர்வை, 13 வது அரசிலமைப்புத் திருத்தச்சட்டத்தை அடிப்படையாக கொண்டு பெற்றுக்கொடுக்கவேண்டும் என இலங்கைக்கு அறிவுரை கூறியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2008 ஆம் ஆண்டின் புதுவருடத்திற்கு முன்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக தெரிவித்திருந்தார்.

எனினும் இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தாம் யுத்தத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் வெற்றிபெற்று விடுவோம் என தெரிவித்திருந்ததாகவும் லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments: