Thursday, 10 July 2008

அரசின் போர்த் தந்திரோபாயங்களை இலங்கையர்கள் எதிர்க்கக் கூடும் -புலும்பெர்க்

அரசாங்கத்தின் போர்த் தந்திரோபாயங்களை இலங்கையர்கள் எதிர்க்கக் கூடும் எனப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளதாகப் புலும்பெர்க் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.


இலங்கை அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் யுத்த நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படாவிட்டால் பொதுமக்களின் நன்மதிப்பை இழக்க நேரிடும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் படைபலம் குறிப்பிடக் கூடியளவு வலுவிழந்துவிடவில்லை எனச் சர்வதேச பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான ஜேன்ஸ் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்னமும் 10,000த்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் எஞ்சியிருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

எனினும், வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதிக பலம் பொருந்திய யுத்த தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வருவதாக சுட்டிக் காட்டப்படுகிறது.

தொடர்ச்சியாக யுத்தம் நீண்டு கொண்டு சென்றால் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலைக்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 4 வருடங்களாக இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக பொருட்கள்; சேவைகளின் விலை சடுதியான உயர்வுப் போக்கைத் தொடர்ச்சியாகக் காட்டிய வண்ணம் உள்ளது.

எனவே, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்படாது நீண்டு கொண்டு சென்றால் அது இந்த அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை வலிய அமைக்கக் கூடும் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

No comments: