Monday, 7 July 2008

ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் மோசமான நாடுகளில் இலங்கை மூன்றாமிடம்

உலகத்திலேயே ஊடகவியலாளர்கள் பணியாற்றுவதற்கு மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக உலக பத்திரிகைகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு மிகவும் மோசமான நாடு ஈராக் எனவும், அதற்கு அடுத்த மோசமான நாடு சோமாலியா எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்வதில்லையென ஊடக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை 12 ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டிருப்பதுடன், ஒருவர் வெட்டிக்கொல்லப்பட்டிருப்பதாக ஊடக அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஊடக சுதந்திரத்துக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றி அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்தும் என்ற நம்பிக்கை அற்றுப்போயிருப்பதாக உள்ளூர் ஊடக அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஊடகவியலாளர்ள் மீதான தாக்குதல்களுக்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்னவென ரொய்டர்ஸ் செய்திச் சேவை வினவியபோது “விசாரணைகள் நடத்தப்படுகின்றன. இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை” என பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர பதிலளித்திருந்தார்.

இந்த நிலையிலேயே ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகத் தமது பணிகளை முன்னெடுப்பதற்கு இலங்கை மிகவும் மோசமான நாடுகளில் மூன்றாவது இடத்தில் அமைந்திருப்பதாக உலக பத்திரிகைகளின் அமைப்பு தெரிவித்துள்ளது

இலங்கையில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின்றமையை கடந்த ஜுலை 1ஆம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கண்டித்திருந்தது. அத்துடன், இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டுமெனக் கோரி 30 ஊடக அமைப்புக்கள் இணைந்து கையொப்பமிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனுக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: