Monday, 7 July 2008

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அரசாங்கம் பொறுப்பல்ல- ஊடகத்துறை அமைச்சர்

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கப் பிரதிநிகளுக்கெதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அதற்கு அரசாங்கம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன கூறியுள்ளார்.

48 மணி நேரத்திற்குள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாமென உளவுத்துறையினருக்குத் தகவல்கள் கிடைத்திருப்பதாகவும்,

இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு படையினரை உச்சளவில் பயன்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க முடியாதெனக் குறிப்பிட்ட அமைச்சர், எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு தம்மால் எந்தவிதப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ள வேலை நிறுத்தம் நியாயமற்ற கோரிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருப்பதாக இன்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறினார்.

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்துகொள்ளப் போவதில்லையெனவும்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்ட நாள் முதல் இதுவரை அரசாங்க ஊழியர்களுக்கு சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு அதிகூடிய சம்பள அதிகரிப்பு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனியார்துறை ஊழியர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அடுத்துவரும் வரவு-செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் வரை அரசாங்க ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுக்கெதிராக இடம்பெற்ற மோதலில் இராணுவத்தினர் பெற்ற வெற்றியை குறைத்து மதிப்பிடுவதுதே இந்த வேலை நிறுத்தத்தின் முக்கிய நோக்கமாகவிருப்பதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றஞ்சாட்டினார்.

No comments: