Friday, 25 July 2008

அரசாங்கம் பொறுப்பேற்றது முதல் ஸ்ரீலங்கன் எயர் நிறுவனம் பாரிய நட்டத்தில் - ரவி கருணாநாயக்க

சர்வதேச ரீதியில் முன்னணி வகிக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முறுகல் நிலை காரணமாக இலங்கை அரசாங்கத்தினால் பொறுப்பேற்ற ஸ்ரீலங்கன் எயர் நிறுவனம் பாரியளவில் நட்டமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றது முதல் இதுவரையில் சுமார் 570 கோடி ரூபா நட்டமேற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எமிரேட்ஸ், சிங்கப்பூர் எயர்லைன்ஸ், தாய் எயர்சேர்விஸ் போன்ற நிறுவனங்கள் அதிக லாபமீட்டி வரும் சந்தர்ப்பத்தில் இலங்கையின் தேசிய விமானசேவை பாரியளவில் நட்டமடைந்து வருவது மிகவும் வேதனையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையற்ற செயற்பாடுகளினால் இறுதியாக நாட்டின் பொதுமக்களே கஸ்டங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விமானசேவை தொடர்பான அவை ஒத்தி வைப்பு விவாதத்தில் கலந்து கொண்ட போதே கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, செலவுகளை குறைப்பதற்கும், திறமையான நிர்வாகத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக விமானசேவைகள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

No comments: