Friday, 25 July 2008

ஜெனீவா, ஒஸ்லோ, சிட்னி, தென்னாபிரிக்காவில் இன்று கறுப்பு ஜுலை

1983ஆம் ஆண்டு இனப்படுகொலையின் 25வது ஆண்டையும், 1958ஆம் ஆண்டு படுகொலையின் 50வது ஆண்டு நினைவையும் முன்னிட்டு, புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நினைவு நிகழ்வுகள், மற்றும் கவன ஈர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.



ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலத்திற்கு முன்பாக, 1983ஆம் ஆண்டு இனப்படுகொலை பற்றிய கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றை சுவிஸ் தமிழர் பேரவை இன்று நடத்தவுள்ளது.

சாவிலும் வாழ்வோம் என்ற கருப்பொருளுடன் இடம்பெறவுள்ள இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தில், ஜுலை கலவரம் தொடர்பாக வெளிநாட்டு மக்களுக்கு எடுத்து விளக்கப்படவுள்ளது.

இன்று பிற்பகல் 2:00 மணிக்கு ஐ-நா முன்றலில் நடைபெறவுள்ள இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தில், பல அமைப்புகளும், மக்களும் இணைந்துகொள்ள இருப்பதாக, சுவிஸ் தமிழர் பேரவை தெரிவித்தது.

நோர்வேயில் கறுப்பு ஜுலையை முன்னிட்டு நிழற்படக் கண்காட்சி, கவன ஈர்ப்புப் போராட்டம் என்பன இன்று இடம்பெறவுள்ளன.

நோர்வேயில் இரண்டு இடங்களில் நண்பகல் 12:00 மணிமுதல் மாலை 4:00 மணிவரை இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அவுஸ்திரேலியா சிட்னியில் மூன்று இடங்களில் இன்று நண்பகல் 12:00 மணிமுதல் மதியம் 2:00 மணிவரை கறுப்பு ஜுலை நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

நாடாளுமன்றத்திலிருந்து நகரசபை மண்டபம்வரை ஊர்வலமும், பேர்வூட் பூங்காவில் விழிப்புணர்வுக் கூட்டமும், பரமற்றா நகரசபைக்கு அண்மையில் நிழற்படக் கண்காட்சியும் இடம்பெறுகின்றன.

தென்னாபிரிக்காவில் இன்று மாலை 6:30 முதல் இரவு 8:30வரை சட்ஸ்வோர்த் பகுதியிலுள்ள கர்வஸ்ரன் ஆலய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வில், துணையமைச்சர் றோய் ராதாகிருஸ்ண படையாட்சியும் கலந்துகொள்கிறார்.

No comments: