Monday, 21 July 2008

இராணுவ முன்நகர்வு தொடரும் வரை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை – விடுதலைப் புலிகள்

இராணுவ முன்நகர்வு தொடரும் வரை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடமில்லையென தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.ஆயுதங்கள் களையப்பட்டால் மாத்திரமே சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுமென அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.


எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிபந்தனைகள் நடைமுறைச் சாத்தியப்பாடற்றதெனத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் தெரிவித்துள்ளார்.

வலிந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகளைத் தொடருவதற்கான சாத்தியப்பாடுகள் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கப் படைத்தரப்புப் பாரியளவில் தாக்குதல்களை மேற்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அசோசியட் பிரஸ் ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய விசேட மின் அஞ்சல் செவ்வியின் போது பா.நடேசன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அரச படைத்தரப்பின் வலிந்த தாக்குதல்களுக்கு அஞ்சப் போவதில்லை எனவும் சுதந்திர தமிழ்த் தாயகத்திற்கான போராட்டம் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான தாக்குதல்களை வெற்றிகரமாக எதிர்நோக்கக்கூடிய பல போர்த் தந்திரோபாயங்கள் மற்றும் உத்திகள் என்பவற்றினை விடுதலைப் புலிகள் பயன்படுத்துவர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: