Wednesday, 23 July 2008

சிறுவர்கள் பாடசாலைக்கு அனுப்பப்படாமையே துஷ்பிரயோகம் அதிகரிக்கக் காரணம்-சிறுவர் அபிவிருத்தி அமைச்சு

சிறுவர்கள் பாடசாலைகளுக்குத் தொடர்ந்தும் அனுப்பப்படாமல் இடைநிறுத்தப்படுவதே கூடுதலான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருப்பதாக வலுவூட்டல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தமது அமைச்சுக்கு 1929 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக வலுவூட்டல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் யமுனா பீரிஸ் தெரிவித்துள்ளார். பாடசாலைகளுக்குச் செல்லாமல் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் சிறுவர்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் செயற்திட்டங்களை அதிகரிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறுவர்களை வேலைக்கு அனுப்புவதால் குடும்பத்துக்கு அதிக வருமானம் கிடைப்பதாலேயே பெரும்பாலான சிறுவர்கள் பாடசாலைக்கு அனுப்பப்படுவதில்லையென பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

"வறுமையால் பாதிக்கப்படும் பெற்றோர் தமது பிள்ளைகளை குறைந்த வயதிலேயே வேலைக்கு அனுப்பிவிடுகின்றனர்" என அவர் கூறினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக முறையிடுவதற்கென அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 1929 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், சிறுவர்கள் பாடசாலைக்கு அனுப்பப்படாமல் இருப்பது தொடர்பான முறைப்பாடுகளே அதில் கூடுதலானவை எனவும் வலுவூட்டல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

"கடந்த பெப்ரவரி மாதம் முதல் இன்றுவரை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிறுவர் பாதுகாப்பு நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 50 வீதத்துக்கும் மேலானவை சிறுவர்களைப் பாடசாலைக்கு அனுப்பாமை பற்றியவை. ஏனையவை வேறு முறைப்பாடுகள்" என பேரேரா குறிப்பிட்டார்.

தமக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்து அதன் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறுவர் வலுவூட்டல் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் யமுனா பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: