Wednesday, 23 July 2008

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் தாக்கம் செலுத்த அரசசார்பற்ற நிறுவனங்கள் முயற்சி: ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்வது பற்றிய பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான தேசிய இயக்கமொன்றை உருவாக்குவதற்கு சில அமைச்சர்கள், உள்ளூர் மற்றம் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடம் தங்கியிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.

அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, டிலான் பெரேரா மற்றும் மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே மற்றும் மக்கள் கட்சியின் ரஞ்சித் நவரட்ண ஆகியோர்


இந்த தேசிய இயக்கத்துக்கு முன்னிலை வகிப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரட்ன தேரர் தெரிவித்தார்.

“இவ்வாறான முயற்சிகள் நிச்சயமாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டங்களிலும் தாக்கத்தைச் செலுத்தும். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படவிருக்கும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக எமது கட்சி கடும் நடவடிக்கை எடுக்கும்” என அவர் கூறினார்.

சமஷ்டி என்ற பெயரில் பிரிவினை வாதத்துக்கு வழிஏற்படுத்தும் வகையில் இந்த நான்கு அரசியல்வாதிகளும் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய தயாரட்ன தேரர்,


தீர்மானங்களை எடுக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு கொழும்பிலுள்ள சில உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.

“அவ்வாறான அமைப்புக்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரோ அல்லது உறுப்பினர்களோ முன்வைக்கும் பிரேரணைகளை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது” என ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரட்ன தேரர் கூறினார்.

எனினும், தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என அமைச்சர் ராஜித சேனாரட்ன கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார். “குற்றஞ்சுமத்தப்பட்டிருக்கும் நாங்கள் நால்வரும் 20-30 வருடங்களுக்கு முன்னர் அரசியலுக்கு வந்தவர்கள்.

அந்தக் காலத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் செயற்பட ஆரம்பிக்கவில்லை. எனவே, அரசசார்பற்ற நிறுவனங்களின் ஆதரவுடன் பிரேரணைகளை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை” என அமைச்சர் கூறியுள்ளார்.

No comments: