தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது தனியாகப் பிரிந்துசென்று சுயநிர்ணய அடிப்படையில் செயற்பட அனுமதிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனிநாட்டுக் கோரிக்கையானது விடுதலைப் புலிகளின் கோரிக்கை இல்லையென இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய சம்பந்தன்,
தனிநாட்டுக் கோரிக்கையானது தமிழர்களின் கோரிக்கையெனவும், இதற்காக கடந்த 50 வருடங்களுக்கு மேலாகத் தமிழர்கள் போராடிவருவதாகவும் கூறினார்.
எனினும், தமிழர்களின் கோரிக்கையை கடந்த காலங்களில் ஆட்சிசெய்த பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் உதாசீனம் செய்து, அடக்கி ஒடுக்கி ஆளமுற்பட்டதாலேயே தமிழர்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாக சம்பந்தன் கூறினார்.
தமிழர்களின் கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் அல்லது பொருத்தமான அரசியல் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் எனவும்,
இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பதாகக் கூறி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அரசாங்கம் நியமித்தபோதும், தற்பொழுது அதன் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லையெனவும் கூறினார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீடு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர்,
சர்வதேசமே ஏற்றுக்கொண்டிருக்கும் சுயநிர்ணய உரிமையை இலங்கை அரசாங்கமும் ஏற்று தமிழர்களுக்கு அதனை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு, கிழக்கிலிருந்து மக்களை வெளியேற்றிவிட்டு அங்கு சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனவும், கிழக்கில் குறிப்பாக திருகோணமலையில் இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர்
மீளக்குடியமர்த்தப்படவில்லையெனவும், மக்கள் இடம்பெயர்ந்த சில இடங்களை இராணுவத்தினர் உயர்பாதுகாப்பு வலயமாக்கியிருப்பதாகவும் சம்பந்தன் பாராளுமன்றத்தில் கூறினார்.
சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் அரசாங்கம், சிங்கள மக்களை குடியேற்றும் பகுதிகளில் மாத்திரம் அபிவிருத்திகளை முன்னெடுத்துக்கொண்டு,
அனைத்து சமூகத்தினருக்குமான அபிவிருத்திகளை முன்னெடுப்பதாக உலகத்துக்குக் காண்பித்து வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.
சுயநிர்ணய உரிமையை அரசாங்கம் வழங்காது- சபை முதல்வர்
தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஒருபோதும் சுயநிர்ணய உரிமையை வழங்காது என சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறிபால.டி.சில்வா இன்று பாராளுமன்றத்தில் பதிலளித்தார்.
இனப்பிரச்சினையை அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்த்துவைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், யுத்தத்தின் மூலம் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என அரசாங்கம் கருதவில்லையெனவும் கூறினார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே அரசாங்கம் மோதல்களில் ஈடுபட்டு வருவதாகவும், சர்வசேத்தின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் தலைசாய்க்கப்போவதில்லையெனவும் அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment