Saturday, 12 July 2008

விடுதலைப் போராட்ட அமைப்புகள் தமது இலக்கை அடையும் வரையில் ஒருபோதும் ஆயுதக் களைவை மேற்கொள்ளக் கூடாது.'-பிடெல் காஸ்ட்ரோ

சத்திரியன் "

விடுதலைப் போராட்ட அமைப்புகள் தமது இலக்கை அடையும் வரையில் ஒருபோதும் ஆயுதக் களைவை மேற்கொள்ளக் கூடாது.' "கடந்த 50 வருடங்களில் ஆயுதக் களைவை மேற்கொண்ட எந்தவொரு விடுதலை அமைப்பாவது சமாதானத்தை அனுபவிக்கும் வரை உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.' இது கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், கியூபாப் புரட்சிக்குத் தலைமை வகித்தவருமான பிடெல் காஸ்ட்ரோ தெரிவித்திருக்கின்ற கருத்தாகும்.

உலகின் மிகச்சிறந்த புரட்சியாளர்கள் என்று பட்டியலிட்டால் அதில் முக்கியமான இடத்தை பிடெல் காஸ்ட்ரோவுக்கு அவரது எதிரிகள்கூடக் கொடுப்பார்கள். தற்போது தள்ளாத வயதில் நோயுடன் போராடும் அவர் இன்னமும் இணையத்தளங்கள் வாயிலாகவும் வேறு ஊடகங்கள் வாயிலாகவும் புரட்சியாளர்களை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

கடந்த வாரம் இணையத்தளம் மூலம் வெளியிட்ட கட்டுரை ஒன்றிலேயே அவர் மேற்கண்ட அறிவுரையை கூறியிருக்கிறார். கொலம்பியாவில் போராட்டம் நடத்தும் "பாஸ்க்' அமைப்புக்கே அவர் இந்தக் கருத்தை நேரடியாகத் தெரிவித்திருப்பினும், உலகம் முழுவதற்கும் இது பொருத்தப்பாடுடையதே.

பிடெலின் இந்தக் கருத்தை படித்தபோது, ஒரு சில வாரங்களுக்கு முன்னர், இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து கூர்க்காலாந்து என்ற தனி நாட்டைப் பிரித்துத் தரக் கோரும் போராட்டத்தை மீளவும் ஆரம்பிக்கப் போவதாக கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பு அறிவித்திருந்தது தான் நினைவுக்கு வந்தது.

1980களின் நடுப்பகுதி இந்தியாவில் பிரிவினைப் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த காலகட்டம். அப்போது காஷ்மீர், பஞ்சாப், நாகலாந்து, மணிப்பூர்,அசாம், போன்றவற்றில் பிரிவினைப் போராட்டங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன.

அதேவேளை மேற்குவங்கத்தில் டார்ஜிலிங் என்ற புகழ்பெற்ற தேயிலை விளையும் பிரதேசத்தை மையமாகக் கொண்டு கூர்க்காலாந்து என்ற தனிநாட்டை உருவாக்க கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி போராட்டம் நடத்தியது.

198889 காலப்பகுதியில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுக்குச் சென்ற இந்த அமைப்பு ஒரு கட்டத்தில் மிகக் குறைந்தளவு அதிகாரங்களுக்காக இறங்கிச் சென்றது.

இந்திய அரசாங்கத்தின் மிரட்டலுக்குப் பயந்தோ, அதிகாரத்துக்கு ஆசைப்பட்டோ இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்.

இந்த இணக்கப்பாடு இறுதிக் கட்டத்தை அடையும் முன்னரே கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி ஆயுத ஒப்படைப்புக்கும் இணங்கியது. ஆயுத ஒப்படைப்பு நிகழ்வில் அந்த அமைப்பின் தலைவரான சுபாஸ் கெய்ஷிங் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோது, "நாங்கள் கொடுத்தது அதிகம். ஆனால் பெற்றுக் கொண்டது மிகமிகக் குறைவு' என இரண்டே வரிகளில் தெரிவித்திருந்தார். வீரகேசரி வாரவெளியீட்டில் சஞ்சிகைப் பக்கத்தின் முகப்பில் இந்தவிடயம் தொடர்பாக ஒரு முழுப்பக்க கட்டுரை அப்போது வெளியாகியிருந்தது. அது இப்போதும் கண்முன் விரிகிறது.

கொடுத்தது அதிகம், பெற்றது மிகக்குறைவு என்று சுபாஸ் கெய்ஷிங் அன்று கூறிய போது, அவர் இந்திய அரசிடம் ஏமாந்து போனதை வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார் என்பதை உணர முடிந்தது.

இப்போது ஓரிரு வாரங்களுக்கு முன்னர், மீண்டும் தனிநாட்டுக்கான போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி அறிவித்தபோது, சுபாஸ் கெய்ஷிங் நிச்சயமாக ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதை உறுதிசெய்து கொள்ள முடிந்தது.

இந்தநிலையில் தான், கியூபாப் புரட்சியாளர் பிடெல் காஸ்ட்ரோ கொலம்பியப் போராளிக் குழுவுக்கு வழங்கியிருக்கின்ற அறிவுரை, ஆயுதக் களைவு அல்லது ஆயுத ஒப்படைப்பு என்பது அர்த்தபூர்வமான சமாதானத்தை ஏற்படுத்த உதவாது என்பதை அனுபவபூர்வமாக உணர்த்தி நிற்கிறது.

அண்மைக் காலமாக இலங்கையிலும் ஆயுதக்களைவு பற்றி அதிகமாகப் பேசப்படுகிறது. அதாவது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டுவந்தால்தான் பேச்சு நடத்த முடியும் என்று அரசாங்கம், புலிகளைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இங்கே ஆயுதங்களைக் கைவிடுதல், ஆயுதங்களை ஒப்படைத்தல், ஆயுதக்களைவு எல்லாமே ஒரே அர்த்தங்களைத் தான் கொடுக்கின்றன.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் புலிகள் இயக்கம் தம்மிடம் உள்ள ஆயுதங்கள் அனைத்தையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு வந்தால் மட்டுமே பேச்சு நடத்தலாம் என்று ஒற்றைக்காலில் நிற்கிறது. இப்போது அப்படி ஆயுதங்களைக் கைவிட்டாலும் போதாது, ஒற்றையாட்சித் தீர்வை ஏற்றுக் கொள்வோம் என்று உறுதிமொழியையும் அளிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் நிபந்தனை வெளியிட்டிருக் கிறது.

சமாதானப் பேச்சுக்கான முன் நிபந்தனையாக எங்கே ஆயுதக்களைவு பற்றிப் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சமாதானப் பேச்சில் விருப்பின்மையும் இராணுவத் தீர்வின் மீதான நாட்டமும் இருக்கிறதென்றே அர்த்தம்.

இப்போது இலங்கை அரசாங்கம் ஆயுதக்களைவு பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் அதனிடமும் சமாதானத்தீர்வு பற்றிய அக்கறை இல்லை என்றே முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பேசும்போது, "புலிகளுடன் பேச்சு நடத்த அரசாங்கம் இப்போதும் தயாராகவே உள்ளது.

ஆனால் அதற்கு முன்னர் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும். அவர்களின் ஆயுதங்கள் களையப்படாமல் பேச்சுகள் இனிமேல் இடம்பெறாது.

அதேநேரம் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு பேச்சுக்கு வருவதாகவும் புலிகள் ஒப்புக்கொள்ள வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதில் இரண்டு முன்நிபந்தனைகள் அடங்கியிருக்கின்றன. நிபந்தனையற்ற பேச்சுக்குத் தயார் என புலிகள் கூறுகையில் அரசாங்கம் நிபந்தனைகளை கடுமையானதாக்கி வருகிறது.

போர்முனையில் அரசபடைகள் மேலாதிக்க நிலையை எட்டியிருப்பதாகக் கருதிக் கொண்டே அரசாங்கம் இவ்வாறு முன் நிபந்தனைகளைப் போட்டு பேச்சுக்கான வழிகளை அடைத்து வருகிறது.

அதேநேரம் "இராணுவ வெற்றிகள் எந்தத் தீர்வையும் தராது. பேச்சுக்களுக்கு அது ஈடாகவும் மாட்டாது' என்று ஐ?ஷ் விடுதலை இராணுவத்தின் மூத்த தளபதியும், தற்போது வட அயர்லாந்தின் பிரதி முதலமைச்சருமாக உள்ள மாட்டின் மெக்கின்னஸ் தெரிவித்திருப்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாக உள்ளது. பி.பி.சி.

பேட்டியொன்றில் இலங்கை நிலைவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

அவரது கருத்தானது இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய போர்?லம் தீர்வு காண்பதென்ற நிலைப்பாட்டை முற்றிலும் நிராகரிப்பதாகவே உள்ளது.

இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியில் தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகள் உலகளவில் தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

அதுபோன்றே நிரந்தர அமைதித்தீர்வு எட்டப்படுவதற்கு முன்னர் ஆயுதக்களைவுக்கு இணங்கிய எந்தவொரு விடுதலை அமைப்புமே சமாதானத் தீர்வை அனுபவிப்பதற்கு முன்னரே அழிந்து போய்விட்டன.

கூர்க்கா இன மக்களின் விடுதலைக்காகப் போராடி ஆயுதங்களைக் கைவிட்டு, இப்போது மீளவும் அதைத் தூக்க முடிவு செய்திருக்கும் கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி போன்ற அமைப்புகளின் வரலாறு, புலிகளை ஒருபோதும் ஆயுதக்களைவுக்கு இணங்கும் நிலைக்கு இட்டுச் செல்லப்போவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தம்.

1987இல் இந்திய அரசின் வாக்குறுதிகளை நம்பி புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர், அவர்கள் அழிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டபோதுதான் இந்தியப் படைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர்.

இன்னொரு தடவை அரைகுறை வாக்குறுதிகளை நம்பியோ, பேச்சுக்கான முன்நிபந்தனைக்கு உட்பட்டோ புலிகள் ஆயுதக்களைவுக்கு இணங்கமாட்டார்கள்.

சமாதானப் பேச்சுக்கள் என்பது கடந்த காலத்தில் வெறும் காலம் கடத்தும் உத்தியாகவே இருந்துள்ளன. எனவே எந்த உருப்படியான தீர்வை உத்தரவாதப்படுத்தாத ஒரு பேச்சுக்காகப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு நடத்த வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது.

புலிகள் இராணுவ ரீதியில் பலவீனமடைந்து போய்விட்டதாகக் கருதியே அரசாங்கம் இறுக்கமான நிபந்தனைகளை அறிவித்து பேச்சுக்கான கதவுகளை அடைத்து வைத்திருக்கிறது.

போர்க்களத்தில் தற்போதுள்ள படைபல நிலையில் மாற்றம் ஏற்படாதவரை என்பதுடன் பேச்சுக்கான வாய்ப்புகளும் தொலைவுக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கும்.

No comments: