Friday, 18 July 2008

ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை இலங்கை வருகிறது

இலங்கையின் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கை வரவுள்ளது.

இந்த வருடத்துடன் காலாவதியாகும் ஏற்றுமதி வரிச்சலுகையை (ஜீ.எஸ்.பி.பிளஸ்) மேலும் நீடிப்பது குறித்தும் இலங்கைவரும் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றக் குழுவினர் கலந்துரையாடல்களை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.

ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஜூலை 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை வரவேற்றிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆர்யசிங்க, இக் குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினை நேரில் கண்டுகொள்வார்கள் எனவும், கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனை சந்திப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய மாகாணசபை நிருவாகத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான முதலாவது உத்தியோகபூர்வ தொடர்பாடலாக இந்த விஜயம் இருக்கும் எனவும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஐரோப்பிய பிரதிநிதிகளுக்கும், கிழக்கு மாகாண பிரதிநிதிகளுக்குமிடையிலான சிறந்த உறவுக்கு இது வழிசமைக்கும் எனவும் ஆர்யசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குமான முழுமையான பங்காளராகச் செயற்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: