Thursday, 24 July 2008

வெளிநாட்டு பிரசார நடவடிக்கையால் புலிகளுக்கு வெற்றி அமைச்சர்கள் சுகபோகங்களையே அனுபவிக்கின்றனர்

*சபையில் ஐ.தே.க. எம்.பி. ரவிகருணாநாயக்க வெளிநாட்டு பிரசார நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளே வெற்றியடைந்துள்ளனர்.

அமைச்சர்களோ வெளிநாடுகளுக்கு சென்று சுகபோகங்களை அனுபவித்து மக்களின் பணத்தை வீண் விரயம் செய்கின்றனரென ஐ.தே.க. வின் எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாரளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற சார்க் மாநாட்டுக்கு செலவிடப்படும் நிதி தொடர்பிலான குறை நிரப்பு பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

இலங்கைக்கு வெளிநாட்டுக் கொள்கைகள் உண்டாவென இந்த அரசிடம் கேட்டுகிறோம். இந்த நாட்டின் தேசியக் கொள்கைகள் அமுலாக்கப்படுகின்றன தேவையற்ற தொரு சார்க் மாநாட்டுக்காக 288 கோடி ரூபா வீண் விரயம் செய்யப்படுகின்றது.

சார்க் மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டுத் தலைவர்களை பாதுகாக்க அந்தந்த நாட்டுப் படைகள் இலங்கைக்கு வருகின்றன. இது எவ்வளவு வெட்கக் கோடான விடயம். இலங்கையின் இறைமையை இந்த அரசு அடகு வைத்து விட்டது.

இந்திய உயர் அதிகாரிகள் ஏன் இலங்கை வந்தார்கள் ? சார்க் மாநாடு தொடர்பாக பேச வந்தார்களா ? அல்லது வேறு விடயங்களுக்கு வந்தார்களா ? அவர்கள் ஆறுமுகம் தொண்டமான், சம்பந்தன் , டக்ளஸ் தேவனாந்தா ஆகியோருடன் என்ன பேசினார்கள் ? இந்த விடயங்களை அரசு வெளிபடுத்த வேண்டும்

வெளிநாட்டு படையினர் இலங்கைக்கு வரவில்லையென அரசு பொய்ப் பிரசாரம் செய்கின்றது. எற்கனவே ஒரு தொகுதி வெளிநாட்டு படையிகள் கொழும்பு வந்து இறங்கிவிட்டனர்.

வெளிநாட்டு பிரசாரங்களில் விடுதலைப்புலிகளே வெற்றியடைந்துள்ளனர். அமைச்சர்கள் வெளிநாட்டுகளுக்குச் சென்று சுக போகம் அனுபவித்து மக்களின் பணத்தை வீண்விரயம் செய்கின்றனர்.

8 நாடுகளின் தலைவர்கள் வருவதற்காக 60 வருடமாக ஓரிடத்தில் வாழ்ந்த வறிய மக்கள் வீதிக்கு விரட்டப்பட்டுள்ளனர். சார்க் மாநாடு நடத்தபடுவது வறுமையை ஒழிக்கவே. ஆனால் இலங்கையில் வறுமையை அதிகரிக்கவே சார்க் மாநாடு நடத்தப்படுகின்றது.

No comments: